இலங்கை

6 மாதங்களில் பேஸ்புக் தொடர்பில் 748 முறைப்பாடுகள் !

 

– செய்தியாளர் நிர்ஷன் இராமானுஜம் –

இலங்கையில் கடந்த 6 மாதங்களில் பேஸ்புக் சமூக வலைத்தளம் தொடர்பில் 748 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தொலைத்தொடர்புகள் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் கணனி அவசர தயார் நிலை குழு தெரிவித்துள்ளது.

பேஸ்புக் கணக்குகளை முடக்குதல்,தவறான முறையில் பயன்படுத்துதல், ஆகியவை தொடர்பில் 267 முறைப்பாடுகளும், போலியான கணக்குகள் தொடர்பில் 481 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணனி அவசர தயார் நிலை குழுவின் சிரேஷ்ட பொறியியலாளர் ரவிந்து மீகஹஸ்முல்ல “தமிழன்” செய்திகளுக்கு இன்று (12) தெரிவித்தார்.

தனிப்பட்ட நபர்களுக்கிடையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு பழிவாங்கும் நோக்கிலேயே அதிகமான குற்றச்செயல்கள் இடம்பெறுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் ஒருவருடைய தனிப்பட்ட தகவல்களை திருடுவதன் மூலம் அவரை சமூகத்தில் மிக மோசமாக சித்தரிக்க முற்படுவது, இணையத்தள குற்றங்களில் முதன்மை வகிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, உலகில் மிக மோசமாக அதிகரித்து வரும் இணையத்தள குற்றங்களால் எதிர்கால இளைய சமுதாயத்தினரும் தொழில் முயற்சியாளர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகுவர் என சர்வதேச ஆய்வு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இணையவழித் தாக்குதல்கள் காரணமாக 2019 ஆம் ஆண்டு முதல் 6 மாத காலப்பகுதியில் இரண்டு ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஜூனிபர் ரிஸர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேபோன்று, 2021 ஆம் காலப்பகுதியில் ஆண்டுக்கு 6 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்பட கூடும் என சைபர் தாக்குதல்கள் தொடர்பான வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் போலியான கணக்குகள் ஆசிய நாடுகளிலேயே அதிகம் உருவாக்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 76 வீதமான இந்தியர்கள் சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களையே பதிவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.