உலகம்

50 நாடுகளை அச்சுறுத்தியுள்ள கொரோனா

 

உலகில் 8,000ற்கும் மேற்பட்டவர்களைத் தாக்கி அதில் 2800 பேரை பலியெடுத்துள்ள, கொரோனா வைரஸ் 50 நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

கொரனா வைரசினால் ஏற்பட்ட பெரும்பான்மையான பாதிப்பு சீனாவில் இருந்தாலும் தற்போது ஏனைய நாடுகளிலும் அது அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பரில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் இதுவரை குறைவடையும் அறிகுறிகள் தெரியவில்லை.

ஐரோப்பாவில் இத்தாலியில் கடந்த 24 மணிநேரத்தில் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400ஐ தாண்டியுள்ளது.

இத்தாலியை தொடர்ந்து தற்போது மேலும் சில ஐரோப்பிய நாடுகளும் தங்கள் நாட்டில் புதிதாக ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்து அறிவித்துள்ளன.

இதற்கு அப்பால் ஈரானில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 106 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பால் உண்டாகும் ஆபத்து மிகவும் குறைவு என தெரிவிக்கப்பட்ட நிலையில், தெரிவித்துள்ள நிலையில் கலிபோர்னியாவில் இதன் புதிய தாக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித தலங்களான மக்கா மற்றும் மதினாவுக்குள் நுழைய வெளிநாட்டினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால், இந்தாண்டு ஜூலை மாதம் அங்கு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் பிற்போடப்படலாம் எனக் கருதப்படும் போதிலும் இப்போதைக்கு அவ்வாறான முடிவு ஏதும் இல்லையென ஒலிம்பிக்குழு அறிவித்துள்ளது.

எனினும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை சகல ஜப்பானிய கல்விக்கூடங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.