உலகம்

262 வட கொரியர்களை கைது செய்தது ரஷ்யா

எல்லை மீறி மீன்பிடியில் ரஷ்ய கடல் எல்லையில் மீன்பிடியில் ஈடுபட்ட, 262 வட கொரிய மீனவர்களை கைது செய்துள்ள அந்நாட்டு எல்லை பாதுகாப்புப் படையினர், மூன்று மீன்பிடிக் கப்பல்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கப்பல்களுடன், கைப்பற்றப்பட்ட பல மோட்டார் படகுகளும் ரஷ்யாவின் கிழக்கு துறைமுகமான நகோட்காவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

மேலும், 30,000 கணவாய்கள், மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்துள்ளதாக ரஷ்ய எல்லை பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இது இந்த மாதத்தில் இடம்பெற்ற இரண்டாவது கைது சம்பவம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டெம்பர் 17ஆம் திகதி, ஜப்பானிய கடலின், ரஷ்யா கடல் பிராந்தியத்தில் வைத்து இரண்டு வட கொரிய படகுகளை  கைப்பற்றியது.

இந்த சம்பவம் தொடர்பாக மாஸ்கோவில் உள்ள வட கொரிய தூதுவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் ரஷ்யா மற்றும் வட மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளால் பகிர்ந்து கொள்ளப்படும், ஜப்பானிய கடலின் மீன்பிடி உரிமைகள் தொடர்பாக அடிக்கடி சர்ச்சைகள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.