உலகம்

19 மணித்தியால தொடர் பயணம்; சாதனை படைத்தது குவான்டஸ்


அவுஸ்திரேலியாவின் தேசிய விமான சேவையான குவான்டஸ் நிறுவனம் உலகின் நீண்டதூர பயணத்தின் பரீட்சார்த்த பறப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

அமெரிக்காவின் நியுயோர்க் நகரிலிருந்து அவுஸ்ரேலியாவின் சிட்னி நகருக்கு இடைத்தரிப்பு இல்லாமல் இந்த விமானம் 19 மணித்தியாலங்கள், 16 நிமிடங்களில் பயணித்து சாதனை படைத்துள்ளது.

சுமார் 20 மணிநேரத்தில் பயணத்தை நிறைவு செய்ய எதிர்ப்பார்க்கப்பட்ட போதிலும், 44 நிமிடங்கள் முன்னதாகவே இந்த பயணம் நிறைவுக்கு வந்துள்ளது.

நியுயோர்க்கிலிருந்து கடந்த சனிக்கிழமை, இரவு புறப்பட்ட இந்த போயிங் 767-9 ரக விமானம் தொடர்ச்சியாக பறந்து நேற்று அதிகாலை சிட்னி நகரைச் சென்றடைந்துள்ளது.

விமானத்தில், 49 பேர் மட்டுமே பயணம் செய்தனர், விமானத்தில் இருந்த எடையைக் குறைக்கவும், எரிபொருளை மீள் நிரப்பாமல், 16,000 கிலோமீட்டர், (9,500கடல் மைல்) தூரம் பயணிப்பதற்கும் ஏதுவாக, இந்த பயணம் திட்டமிடப்பட்டிருந்தது.

தற்போது உலக அளவில் நீண்ட தூரத்துக்கு இடைத்தரிப்பு இல்லாமல் பறக்கும் விமானசேவையை சிங்கப்பூருக்கும் நியுயோர்க் நகருக்கும் இடையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்கி வருகின்றது.

இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்தால் நியுயோர்க் நகரிலிருந்து சிட்னிக்கும்இ லண்டனிலிருந்து சிட்னிக்கும் நேரடியான விமானப் போக்குவரத்து சேவையை குவான்டாஸ் நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.

30 வருடங்களுக்கு முன்னர், லண்டனில் இருந்து சிட்னிக்கு ஒரு இடைவிடாத விமானம் பயணித்திருந்தாலும் அது ஒருதகவலாக எங்கும் பதியப்படவில்லை.