Breaking News

13 வது திருத்தம் தொடர்பான ஜனாதிபதியின் கருத்து – இந்தியா அதிருப்தி !

 

இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த அமுலாக்கம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச புதுடில்லியில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் இந்தியா அதிருப்தியடைந்துள்ளதாக உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் நடந்த கூட்டு செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட இந்தியப் பிரதமர் மோடி ,முழுமையான 13 வது திருத்த அமுலாக்கம் குறித்து வலியுறுத்தியிருந்தார்.

ஆனால் அதன்பின்னர் இந்திய ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி கோட்டாபய ,13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கமைய சில அதிகாரங்களை பகிர முடியாதெனவும் அதற்கு மாற்றீடு குறித்து சிந்திக்கவேண்டிய தேவை எழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த பின்னணியில் ஜனாதிபதி கோட்டாபயவின் அந்த நிலைப்பாடு குறித்து அதிருப்தியடைந்துள்ள இந்திய அரசு ,இலங்கையானது எதிர்காலத்தில் மாகாண சபை முறைமையை ஒழிக்கும் இலக்கை நோக்கி சென்றுவிடுமா என்ற கவலையை கொண்டுள்ளதாக உயர்மட்ட இந்திய இராஜதந்திர வட்டாரங்கள் குறிப்பிட்டன .

எவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை விரைவில் அழைக்கவுள்ள இந்திய அரசு இந்த நிலைமைகளை அவர்களுடன் ஆராயுமென தெரிகிறது.

அதேசமயம் ஜனாதிபதி கோட்டாபயவின் அழைப்பையேற்று விரைவில் இலங்கை வரவுள்ள இந்தியப் பிரதமர் இந்த விடயம் குறித்து தொடர்ந்து பேசுவாரென அறியமுடிகின்றது.