Breaking News

“13 வது திருத்தத்தின் சில விடயங்களுக்கு மாற்றுவழி தேட வேண்டும்..”- ஹிந்து பத்திரிகையிடம் ஜனாதிபதி கோட்டா !

அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தில் அமுல்படுத்தப்பட முடியாத சில விடயங்கள் இருப்பதாக தெரிவித்திருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதற்கான மாற்றுவழிகள் குறித்து சிந்திக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிற்கான தனது பயணத்தின்போது ”தி ஹிந்து ”பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி – டெல்லி, கொழும்பு இடையே மேலும் ஒருங்கிணைப்பு தேவை ’புதுடில்லியில் நீங்கள் சொன்னது போல இந்தியா-இலங்கை உறவுகளை “உயர் மட்டத்திற்கு” கொண்டு செல்வது எப்படி என்று நம்புகிறீர்கள், முன்னுரிமை பகுதிகள் யாவை?

பதில் – [முன்னாள் ஜனாதிபதி] மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் கூட நாங்கள் புதுடில்லியுடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருந்தோம், பின்னர் இறுதியில் (2014-15), அது திடீரென்று குறைந்தது. சிறிசேன அரசாக இருந்தாலும், அவர்கள் ஒரு நல்ல உறவோடு தொடங்கினார்கள், ஆனால் அது மிகுந்த விரக்தியுடன் முடிந்தது. நான் சீராக இருக்க விரும்புகிறேன். நான் வழக்கமாக மிகவும் வெளிப்படையானவன், எனவே என்னால் ஏதாவது செய்ய முடியாவிட்டால் டில்லியிடம் நேர்மையாகச் சொல்வேன் என்று நம்புகிறேன்; முந்தைய எங்கள் அரசாங்கத்தின் போது நாங்கள் வெற்றிகரமான உறவில் இருந்தோம், ஏனென்றால் எங்களுக்கு ஒரு தனி வழிமுறை இருந்தது, புதுடில்லியுடன் ட்ரொயிகா (3 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு) ஒன்றை ஏற்படுத்தி இருந்தோம்.. போர் அப்போது நடந்து கொண்டிருந்த காரணத்தினால் எங்களுக்கு அந்த வழிமுறை தேவைப்பட்டது, மேலும் நெருங்கிய இணைப்புகள் காரணமாக முக்கியமான சிக்கல்களை தீர்க்க முடிந்தது.

கேள்வி – ஒருங்கிணைப்புக்கான அதே பொறிமுறையை மீண்டும் கொண்டு வருவீர்களா?

பதில் -அந்த நேரத்தில் போர் காரணமாக ஒரு தேவை இருந்தது, ஆனால் இப்போது அது அவசியமானது என்று நான் நினைக்கவில்லை, ஏனெனில் நாங்கள் வெளியுறவு அமைச்சகங்களின் ஊடாக பணியாற்ற முடியும். நாங்கள் புரிந்துணர்வுடன் இருந்தால், உண்மையாக வேலை செய்தால், எங்களுக்கு பிரச்சினைகள் இருக்காது. இந்தியா எங்களுடன் இருக்கக்கூடிய முக்கிய பிரச்சினைகள் சீனா அல்லது பாகிஸ்தானுடனான [எங்கள் உறவுகள்] மீது இருக்கும் என்று நான் நினைக்கிறேன், இந்திய அதிகாரிகளிடையே சந்தேகத்தை அது உருவாக்கும். எதையும் நாங்கள் செய்யாவிட்டால் எந்த பிரச்சனையும் இருக்காது.

கேள்வி – திருகோணமலை எண்ணெய் குதங்கள் மற்றும் துறைமுக மேம்பாட்டுத் திட்டங்கள் போன்ற திட்டங்களில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நீங்கள் மதிக்கிறீர்களா?

பதில்- நாங்கள் மாற்ற வேண்டிய சில திட்டங்கள் உள்ளன, இந்த வருகையின் போது நாங்கள் அதைப் பற்றி விவாதித்தோம். நான் இதுவரை அனைத்து திட்டங்களையும் விரிவாகப் படிக்கவில்லை, ஆனால் இலங்கைக்கு முக்கியமான அனைத்து திட்டங்களையும் விரைவுபடுத்துவேன் என்று உறுதியளிக்கிறேன்.

கேள்வி – இந்தியா அக்கறை கொண்டிருந்த சீனாவுடனான அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவீர்கள் என்று பகிரங்கமாக கூறியுள்ளீர்கள். அதனுடன் இந்தியா ஆர்வம் காட்டிய மத்தள விமான நிலையத்தின் எதிர்காலமும் உள்ளது. இப்போது நீங்கள் ஆட்சியில் இருப்பதால், நீங்கள் என்ன செய்வீர்கள்?

பதில் -அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து திட்டங்களையும் இலங்கை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று நான் நம்புகிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, இவை ஹோட்டல் அல்லது முனையம் போன்றவை அல்ல, துறைமுகம் அல்லது விமான நிலையத்தின் கட்டுப்பாட்டைக் கொடுப்பது நல்லதல்ல.எங்கள் கட்டுப்பாட்டுடன் அவர்கள் எதையும் செய்ய முடியும், ஆனால் இந்த 99 ஆண்டு குத்தகை ஒப்பந்தங்கள் [முந்தைய அரசாங்கம் கையெழுத்திட்டவை] நமது எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். விலைமதிப்பற்ற சொத்துக்களை இப்படி கொடுத்ததற்காக அடுத்த தலைமுறை நம் தலைமுறையை சபிக்கும். அதனால்தான் இந்த முடிவுகளை எங்கள் கட்சி எதிர்த்தது.

கேள்வி – ஆனால் குத்தகைக்கு வழங்க வேண்டிய காரணம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தால் ஏற்பட்ட கடன்கள் தான்…

பதில் -இல்லை, அது தவறு. கடன் பொறி இருந்தது என்று சொல்வதும் தவறு. உண்மையில் எங்கள் காலத்தில் துறைமுக அதிகார சபை முதல் தவணையை [சீன வங்கிகளுக்கு] திருப்பிச் செலுத்தியது. மறுபுறம், சிறிசேன அரசாங்கம் கடன்களாக அதிக பணம் பெற்று அதை செலவு செய்தது. கடன்கள் குவிந்து வருவதைப் பற்றி அவர்கள் கவலைப்பட்டால், இறையாண்மையைக் கொடுப்பதை விட, அவர்கள் ஏன் முதலில் கடனை அடைப்பதைப் பற்றி சிந்திக்கவில்லை.?

கேள்வி – நீங்கள் பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது, குறிப்பாக சீனா நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்புவது தொடர்பாக, கடந்த காலங்களில் இலங்கையின் பாதுகாப்பு ஒத்துழைப்பு விடயங்களில் இந்தியாவுக்கு பிரச்சினைகள் இருந்தன. ?

பதில் – நீர்மூழ்கிக் கப்பல் பிரச்சினை அந்த நேரத்தில் அதிகாரிகளால் சரியாக கவனிக்கப்படவில்லை. போர்க்கப்பல்கள் இலங்கைக்கு இயல்பாக வந்து சென்று கொண்டிருந்தன, அரேபிய கடலுக்கான பாதுகாப்பு பணிக்குழுவின் ஒரு பகுதியாக இருந்த அனைத்து கப்பல்களும், ரஷ்ய கப்பல்கள் உட்பட அங்கு வந்தன. நீர்மூழ்கிக் கப்பல்களை தரிக்க சீனர்கள் கேட்டபோது, அதிகாரிகள் அதை ஒரு சாதாரண துறைமுக அழைப்பாகக் கருதி அதற்கு ஒப்புதல் அளித்தனர். கோட்டாபய இந்தியாவின் நலனுக்கு எதிராக செயற்பட மாட்டாரென முன்னாள் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் ஷங்கர் மேனன் தனது நூலில் எழுதியுள்ளதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

கேள்வி – கடந்த காலங்களில் உங்கள் சகோதரருக்கு எதிரான ஆட்சி மாற்றத்திற்காக இந்திய ஏஜென்சிகள் சதி செய்தன என்ற உங்கள் குற்றச்சாட்டை குறிப்பிட்டுள்ளீர்கள். கடந்த கால சந்தேகங்களுக்கு அப்பால் இப்போது உங்கள் அரசாங்கம் புதிய பக்கம் ஒன்றை திருப்ப முடியுமா?

பதில் – நான் உறுதியாக நம்புகிறேன் [நாங்கள் புதிய பக்கத்தை திருப்ப முடியும்]. ஆட்சி மாற்றத்திற்காக அமெரிக்கா உட்பட ஏஜென்சிகள் சதி செய்வது பற்றி நாங்கள் கேள்விப்பட்டோம். அவர்களுடைய சில சந்தேகங்கள் சீனாவுடனான எங்கள் உறவுகள் காரணமாக இருந்தன, ஆனால் அது ஒரு தவறான புரிதல். நாங்கள் சீனாவுடன் முற்றிலும் வணிக ஒப்பந்தம் செய்தோம். இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளும் வந்து எங்களிடம் முதலீடு செய்யச் சொல்ல விரும்புகிறேன். அவர்கள் தங்கள் நிறுவனங்களுக்கு இலங்கையில் முதலீடு செய்து நாங்கள் வளர உதவ வேண்டும் . ஏனென்றால் அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், இலங்கைக்கு மட்டுமல்ல, ஆசியா முழுவதிலும் உள்ள நாடுகளுக்கும் இதே [பிரச்சினை] இருக்கும். மற்ற நாடுகள் ஒரு மாற்றீட்டை வழங்காவிட்டால் சீனர்கள் பட்டுப்பாதை முன்முயற்சியை முழுவதுமாக எடுப்பார்கள்.

கேள்வி – பயங்கரவாதத்திற்கு எதிராக என்ன வகையான ஒத்துழைப்பை நீங்கள் இப்போது இந்தியாவுடன் எதிர்பார்க்கிறீர்கள்?

பதில் இலங்கையில் அச்சுறுத்தல் இப்போது மாறிவிட்டது.இலங்கைக்கு ஒரு குறிப்பிட்ட அச்சுறுத்தலாக இருந்த புலிகள் போலல்லாமல், ஐ.எஸ் [இஸ்லாமிய அரசு] என்பது உலகெங்கிலும் உள்ள பயங்கரவாதிகள் முன்வைக்கும் உலகளாவிய அச்சுறுத்தலாகும். இந்த அச்சுறுத்தல் குறித்து இந்தியா மற்றும் பிற நாடுகளில் எங்களை விட அதிகமான தகவல்கள் உள்ளன. முந்தைய அரசாங்கம் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை பிரச்சினைகளுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கவில்லை. எங்கள் காலத்தில், இராணுவ உளவுத்துறை எப்போதும் மிக முக்கியமான அமைப்பாக இருந்தது, ஆனால் கடந்த அரசாங்கம் [மேற்பார்வை] இராணுவத்திலிருந்து விலகிச் சென்றது. நாங்கள் இப்போது அதை மாற்றியமைத்துள்ளோம். எங்கள் உளவுத்துறையை மேம்படுத்துவோம் என்று நாங்கள் நம்புகிறோம், இது குறித்தும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்தும் இந்தியா மற்றும் பிறரிடமிருந்து எங்களுக்கு உதவி தேவை.

கேள்வி – கடந்த கால மனித உரிமை மீறல்கள், காணாமல் போனவர்கள் மற்றும் “வெள்ளை வேன்கள்” பற்றிய அச்சங்களையும், குறிப்பாக பத்திரிகையாளர்களுக்கு எதிரான வன்முறை பற்றிய கவலைகளையும் எழுப்புகிறது. அவை திரும்பாது என்று நீங்கள் உறுதியளிப்பீர்களா?

பதில் – அவை போலியான குற்றச்சாட்டுகள், நிச்சயமாக அப்படி எதுவும் என்னால் செய்யப்படவில்லை. 2009 க்குப் பிறகு எங்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிஐடியை (குற்றவியல் புலனாய்வுத் துறை) நாங்கள் கேட்டிருந்தாலும்அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. உண்மை என்னவென்றால், போரின் போது நாங்கள் பத்திரிகையாளர்களைப் பற்றி கண்டிப்பாக இருந்தோம், ஆனால் அமைதி காலத்தில் அல்ல. மஹிந்தவின் அரசாங்கம் போரைத் தொடங்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள், நாங்கள் போரை முடித்தோம். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து முந்தைய ஜனாதிபதிகள் ஏன் கேட்கப்படவில்லை?

கேள்வி – கடந்த வாரம் வெளிவிவகார அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கரின் கொழும்பு வருகைக்குப் பிறகு, இந்திய அரசு தமிழர்களுக்கு நீதி மற்றும் சமத்துவத்தை வலியுறுத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டது. உங்கள் எதிர்வினை என்ன?

பதில் – எனது அணுகுமுறை, நான் வெளியுறவு அமைச்சரிடம் கூறியது போல்,அவர்களுக்கு [தமிழர்கள்] வளர்ச்சியையும், சிறந்த வாழ்க்கையையும் கொடுப்பது மிகவும் முக்கியமானது. சுதந்திரங்கள் மற்றும் அரசியல் உரிமைகளைப் பொறுத்தவரை அரசியலமைப்பில் ஏற்கனவே விதிகள் உள்ளன. ஆனால் தொழில்வாய்ப்பு மூலமாகவும், மீன்வளம் மற்றும் விவசாயத்தை மேம்படுத்துவதன் மூலமாகவும் அங்குள்ள மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் வழிகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்பது எனக்குத் தெளிவாகத் தெரிகிறது. அரசியல் பிரச்சினைகளை நாம் விவாதிக்க முடியும். ஆனால் 70 ஆண்டுகளாக, அடுத்தடுத்த தலைவர்கள் ஒரே ஒரு விஷயத்தை உறுதியளித்துள்ளனர்: அதிகாரப் பகிர்வு.. அதிகாரப் பகிர்வு… அதிகாரப் பகிர்வு.. ஆனால் இறுதியில் எதுவும் நடக்கவில்லை. பெரும்பான்மை சமூகத்தின் விருப்பங்களுக்கும் உணர்விற்கும் எதிராக நீங்கள் எதுவும் செய்ய முடியாது என்றும் நான் நம்புகிறேன். பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கு எதிராக எதையாவது உறுதியளிக்கும் எவரும் பொய்யானவர். தமிழர் பகுதியை அபிவிருத்தி செய்யாதீர்கள், அல்லது வேலை கொடுக்க வேண்டாம் என எந்த சிங்களரும் சொல்ல மாட்டார்கள்.ஆனால் அரசியல் பிரச்சினைகள் வேறு. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு [வடக்கு மற்றும் கிழக்கின்] வளர்ச்சி குறித்த எனது வேலைகளை பார்க்கலாம்.

கேள்வி – அதிகாரப் பகிர்வு குறித்த பேச்சுவார்த்தைகள் அல்லது தமிழ் பெரும்பான்மை பகுதிகளுக்கான உரிமைகள் தொடர்பான 13 வது திருத்தம் குறித்து நீங்கள் உறுதியளிக்கிறீர்களா?

பதில் – பாருங்கள். 13 வது திருத்தம் அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும். பொலிஸ் அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவது போன்ற சில பகுதிகளைத் தவிர மேலும் இது செயல்பட முடியாதது.அதை நாங்கள் செயல்படுத்த முடியாது. அதற்கான மாற்று வழிகளைப் பற்றி விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்.

கேள்வி – கடந்த காலத்தில் பாதுகாப்பு செயலாளராக, நீங்கள் இலங்கை படைகளை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றீர்கள், ஆனால் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், சர்வதேச அளவில் உண்மை மற்றும் நல்லிணக்க செயல்முறையை முன்னெடுத்துச் செல்ல மறுத்துவிட்டதாக நீங்கள் குற்றம் சாட்டப்பட்டீர்கள். ஐந்து ஆண்டுகளின் முடிவில் செயற்பாடு என்னவாக இருக்க விரும்புகிறீர்கள்?

பதில் – அந்த குற்றச்சாட்டுகள் தவறானவை. போரின் போது இருந்ததை விட நான் சமாதான காலத்தில் கூடுதல் வேலைகளை செய்தேன் .மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் பணியாற்றினேன், மேலும் அனைத்து போராளிகளையும் நிராயுதபாணியாக்கினேன். நான் இல்லாமல் மாகாண சபை தேர்தல்கள் இருந்திருக்காது.இது எங்கள் அரசாங்கம் முதன்முறையாக வடக்கு மற்றும் கிழக்கில் நடத்தியது. தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமானதாகவும் இருப்பதை நாங்கள் உறுதி செய்தோம்; நாங்கள் அவற்றில் மோசடி செய்ய முயற்சிக்கவில்லை, அல்லது எங்கள் விருப்பப்படி ஒரு வேட்பாளரை அழைத்து வரவில்லை. சர்வதேச சமூகம் இந்த விஷயங்களை அங்கீகரிக்கவில்லை, தமிழ் அரசியல்வாதிகள் கூட இந்த விஷயங்களை அங்கீகரிக்கவில்லை.

கேள்வி – உங்கள் மூத்த சகோதரர் மஹிந்த இப்போது பிரதமராக இருக்கிறார், மற்றொரு சகோதரர் சமல் அமைச்சராக இருக்கிறார். உங்கள் சகோதரர்களுடனான உறவு இப்போது எவ்வாறு செயல்படும்?மேலும் 19 வது திருத்தத்தின் கீழ் ஒரு பாராளுமன்ற அமைப்பை நோக்கி அதிகாரம் மாற்றப்படுமா?

பதில் – 19 வது திருத்தம் (2015 இல் நிறைவேற்றப்பட்டது) தோல்வி. பாராளுமன்றத்தில் எங்களுக்கு 2/3 பெரும்பான்மை கிடைத்தால் அதை அரசியலமைப்பிலிருந்து நீக்குவோம்.. ஒரு நாடு வெற்றிகரமாக நிர்வகிக்கப்பட உங்களுக்கு ஸ்திரத்தன்மை தேவை. சிறிசேன-விக்ரம்சிங்க அரசாங்கத்தின் போது இது இல்லை.அவர்கள் எப்போதுமே போராடிக்கொண்டிருந்தார்கள்.எந்த வளர்ச்சியும் இல்லை. ஸ்திரத்தன்மை இல்லாமல் முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள்.

கேள்வி – நீங்கள் குடும்பத்தில் டெர்மினேட்டர் என்று அழைக்கப்படுவது உண்மையா?

பதில் – (சிரிக்கிறார்) அது உண்மையல்ல. எனது குழந்தைப் பருவத்திலிருந்தே எங்கள் குடும்பத்தில் நான் மிகவும் அப்பாவி நபர். நான் இராணுவத்தில் சேர்ந்தபோது -, மஹிந்த இராணுவத்தில் சேர்ந்திருக்க வேண்டும், நான் அரசியலில் சேர்ந்திருக்க வேண்டும் என அப்போது எனது குடும்பத்தினர்தெரிவித்தனர் – என்றார்.