இலங்கை

ஹெரோயினுடன் கலக்கப்படும் பெரசிட்டமோல் துகள்கள் ! மதுஷ் சகாக்கள் பொலிஸாரிடம் பரபரப்பு தகவல்

” பாகிஸ்தானில் 15 லட்சத்திற்கு கிடைக்கும் ஹெரோயின் ஒரு கிலோவின் விலை இலங்கைக்கு வரும்போது 35 லட்சமாக உயர்கிறது.அவற்றில் முழு அளவில் ஹெரோயின் சாரம் இருப்பதால் அவற்றிற்கு பெரசிட்டமோல் வில்லை துகள்களை போதைப்பொருள் வர்த்தகர்கள் சேர்க்கின்றனர்.இதனால் சுமார் 80 வீதத்தில் இருந்து 20 வீதமாக ஹெரோயின் சாரம் குறைகின்றது.அப்படி செய்யும்போது ஒரு கிலோ ஹெரோயினில் சுமார் ஒரு கோடி ரூபா வரை இலாபம் கிடைக்கிறது ”

இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள மதுஷின் சகாக்கள் பலர் பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்

சித்தீக் மற்றும் வெலேசுதா ஆகியோர் சிறைக்குள் இருப்பதால் மதுஷ் போதைப்பொருள் வியாபாரத்தை அமோகமாக நடத்தி வந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கஞ்சிப்பான இம்ரானின் தகவலுக்கமைய அவரது வரலாறை பொலிஸார் விபரிக்கின்றனர்.

” உயர்தரம் வரை கல்வி பயின்ற இம்ரான் முதலாவதாக மாளிகாவத்தை பொதுச் சந்தைக் கட்டிடத்தில் உள்ள கோழிக்கடையில் காசாளராக தொழில்புரிந்தார்.மூன்று வருடம் அங்கு வேலைசெய்துவிட்டு பின்னர் தனக்கென ஒரு கோழிக்கடையை மாளிகாவத்தை சந்தியில் ஆரம்பிக்கிறார் இம்ரான்.

அப்போது பிரபல பாதாள உலக குழுவான பாஜி அணியின் முக்கியஸ்தரான மஞ்சள் அக்ரமை சந்திக்கிறார் இம்ரான்.மஞ்சள் அக்ரம் காணாமல் போனதையடுத்து அவரின் பிள்ளைகளையும் மனைவியையும் இம்ரான் பராமரித்து வந்ததையடுத்து பாஜியின் சகோதரர் பையாவுக்கு அது பிடிக்கவில்லை.இம்ரானுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருந்ததால் அவரை சற்று தள்ளி இருக்குமாறு கேட்டார் பையா .

இம்ரானை இரண்டு தடவைகள் பையா குறிவைத்த போதும் அவற்றில் தப்பிய இம்ரான் 2015 மார்ச் 28 ஆம் திகதி பையாவிடம் இருந்து தப்பிக்க வெளிநாடு செல்கிறார்.டுபாய்க்கு சென்ற அவர் மஞ்சள் அக்ரமின் மனைவி பெயரில் வீடு ஒன்றை கொள்வனவு செய்து அக்ரமின் மனைவி – பிள்ளைகளை அங்கு அழைப்பிக்கிறார். பின்னர் அக்ரமின் மனைவி கர்ப்பமுற்று குழந்தையொன்றை பெற்றார்.மொத்தமாக ஐந்து பிள்ளைகளையும் இம்ரான் பராமரித்து வந்தார்.

சொந்த மனைவியை டுபாய்க்கு அழைக்காவிட்டாலும் அவர் இலங்கையில் கொலை செய்யப்பட்டமைக்கும் தமக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று கூறியுள்ளார் இம்ரான்.

இப்போது பும்மா என்பவரும் பூக்குட்டி கண்ணா என்பவரும் தன்னை கொலை செய்ய காத்திருப்பதாகவும் அதற்கான காரணங்களையும் விபரித்துள்ளார் கஞ்சிப்பான இம்ரான்.

தேடும் பொலிஸார் ..

மதுஷின் சகாக்களிடம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸார் போதைப்பொருள் இலங்கைக்குள் வருவதையும் அது இங்கிருந்து செல்வதையும் ஆராய்ந்து வருகின்றனர்.
இலங்கையில் இருந்து விமான நிலையத்தில் போதைப்பொருட்கள் எடுத்துச் செல்லப்படும்போது அவற்றை தடுக்கும் வழிமுறைகள் குறித்து ஆராய்கிறது பொலிஸ் .

வெலேசுதா -சித்தீக் ஆகியவர்கள் சிறையில் இருந்தாலும் அவர்களுக்கு சிறைச்சாலையின் உயரதிகாரிகளின் ஆதரவு இருப்பதால் அவர்கள் சிறைக்குள் இருந்தே போதைப்பொருள் வியாபாரத்தை நடத்துவதாக அறியக் கிடைத்துள்ளது. மதுஷ் பாகிஸ்தான் போதைப்பொருள் வர்த்தகர்களிடம் கொடுக்கல் வாங்கலை சரியாக செய்யாத காரணத்தினால் மதுஸுக்கு பொருள் வழங்கவேண்டாமென பாகிஸ்தான் வர்த்தகர்களுக்கு வெலேசுதா அறிவுறுத்தியிருப்பதுவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது .

( புதிய தகவல்கள் தொடரும்…)