விளையாட்டு

ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: நீதிமன்றம்

கடந்த 2013ம் ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த ஸ்ரீசாந்த் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, ஸ்ரீசாந்த்துக்கு கிரிக்கெட் விளையாட பிசிசிஐ அமைப்பு வாழ்நாள் தடைவிதித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனு மீது தீர்ப்பளித்த கேரள உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்க உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து பிசிசிஐ தாக்கல் செய்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், ஸ்ரீசாந்த் மீதான தடையை உறுதி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ஸ்ரீசாந்த் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது, ஸ்ரீசாந்துக்கு ஏன் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது? என்பது குறித்து, பி.சி.சி.ஐ. அளித்த பதிலில் திருப்தியில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், கிரிக்கெட் விளையாட ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், ஸ்ரீசாந்திற்கு என்ன தண்டனை வழங்கலாம் என்பது பற்றி மூன்று மாதத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என்றும் பிசிசிஐக்கு உத்தரவிட்டுள்ளது.