Breaking News

வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத்தடை – உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை விதித்தும், மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையிலான சிக்கலைத் தீர்க்க குழு அமைக்கவும் முடிவு செய்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 40 நாட்களாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் இதுவரை 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே இந்த வேளாண் சட்டங்கள் அரசியலமைப்புக்கு விரோதமானவை, செல்லத்தக்கது அல்ல எனக் கூறி திமுக எம்.பி. திருச்சி சிவா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்.பி. மனோஜ் ஜா உள்ளிட்ட பலர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, ஏ.எஸ்.போபன்னா, ஆர்.எஸ்.ராமசுப்பிரமணியன் ஆகியோர் முன்பு நேற்று விசாரிக்கப்பட்டபோது, கடும் அதிருப்தியை மத்திய அரசு மீது நீதிபதிகள் குழு தெரிவித்தது.

வேளாண் சட்டங்களுக்குத் தடை விதிக்க மத்திய அரசு முன்வராவிட்டால் உச்ச நீதிமன்றம் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடை விதிக்கும் என தெரிவித்துள்ளது.

அத்தோடு, நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை நிறைவேற்றிய விதம் அதிருப்தி அளிக்கிறது. அனைத்துத் தரப்பினரின் ஆலோசனைகளைக் கேட்டு விவாதித்து முடிவு எடுத்திருக்க வேண்டும் என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.