விளையாட்டு

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணி அபார வெற்றி

 

ஐதராபாத்தில் நேற்று நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணி இமாலய இலக்கை விரட்டிப்பிடித்து அபார வெற்றி பெற்றது. அணித்தலைவர் விராட் கோலி 94 ரன்கள் விளாசினார்.

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நேற்றிரவு நடந்தது. நாணயச் சுழற்சியில் ஜெயித்த இந்திய அணித்தலைவர் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி லென்டில் சிமோன்சும், இவின் லீவிசும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். வாஷிங்டன் சுந்தர் வீசிய முதல் ஓவரிலேயே பவுண்டரி, சிக்சருடன் லீவிஸ் ரன்வேட்டையை ஆரம்பித்து வைத்தார். சிமோன்ஸ் (2 ரன்) தாக்குப்பிடிக்காவிட்டாலும் அடுத்து வந்த வீரர்கள் ரன்மழை பொழிந்தனர்.

ஆடுகளம் முழுக்க முழுக்க துடுப்பாட்டத்துக்கு உகந்த வகையில் காணப்பட்டது. சலனமற்ற இந்த ஆடுகளத்தில் பந்து துடுப்புக்கு ஏதுவாக வந்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பந்தை நாலாபுறமும் இடைவிடாது ஓடவிட்டனர். இவின் லீவிஸ் 40 ரன்களில் (17 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) வாஷிங்டன் சுந்தரின் சுழலில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

மிடில் வரிசையில் ஹெட்மயரும், கெப்டன் பொல்லார்ட்டும் பின்னியெடுத்தனர். இந்திய வீரர்களின் பந்து வீச்சில் துல்லியம் இல்லை. அதிக அளவில் ஷாட்பிட்ச் பந்துகளை வீசி ரன்களை வாரி இரைத்தனர். ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹலின் பந்து வீச்சில் சர்வசாதாரணமாக பந்துகளை எல்லைக்கோட்டுக்கு விரட்டியடித்த ஹெட்மயர் 20 ஓவர் கிரிக்கெட்டில் தனது முதலாவது அரைசதத்தை நிறைவு செய்தார்.

பந்து வீச்சு மட்டுமின்றி இந்தியாவின் பீல்டிங்கும் மோசமாக இருந்தது. ஹெட்மயருக்கு 54 ரன்னில் வாஷிங்டன் சுந்தரும், பொல்லார்ட்டுக்கு 22 மற்றும் 24 ரன்களில் முறையே எல்லைக்கோடு அருகில் நின்ற ரோகித் சர்மாவும் பிடியெடுக்கும் வாய்ப்பை நழுவ விட்டார்.

ஹெட்மயர் தனது பங்குக்கு 56 ரன்களும் (41 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), பொல்லார்ட் 37 ரன்களும் (19 பந்து, ஒரு பவுண்டரி, 4 சிக்சர்) விளாசிய நிலையில் யுஸ்வேந்திர சாஹலின் ஒரே ஓவரில் ஆட்டம் இழந்தனர். ஆனாலும் அவர்களின் ரன்ரேட் 10 ரன்களுக்கு குறையாமல் நகர்ந்தது. கடைசி கட்டத்தில் ஜாசன் ஹோல்டர் (24 ரன், 9 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்)விளாச அந்த அணி 200 ரன்களை கடந்தது.

20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது.

இந்தியாவுக்கு எதிராக அந்த அணியின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

அடுத்து மெகா இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் ரோகித் சர்மா (8ரன்) ஏமாற்றம் அளித்தார். பின்னர் லோகேஷ் ராகுலும், கேப்டன் விராட் கோலியும் இணைந்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டதுடன், எதிரணியின் பந்து வீச்சையும் துவம்சம் செய்தனர். இவர்களின் அதிரடி ஜாலம் உள்ளூர் ரசிகர்களை குதூகலப்படுத்தியது. ராகுல் 62 ரன்களில் (40 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் கோலி ருத்ரதாண்டவம் ஆடினார். தனக்கே உரிய ஸ்டைலில் ஏதுவான பந்துகளை தெறிக்க விட்டு அசத்தினார். இன்னொரு பக்கம் ரிஷாப் பண்ட் (2 சிக்சருடன் 18 ரன்), ஸ்ரேயாஸ் அய்யர் (4 ரன்) விரைவில் வெளியேறினாலும், கோலி இலக்கை எட்ட வைத்தார். பந்தை சிக்சருக்கு பறக்க விட்டதோடு ஆட்டத்தை சுபமாக முடித்து வைத்தார்.

இந்திய அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 209 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தனது 23-வது அரைசதத்தை கடந்த கோலி 94 ரன்களுடன் (50 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். அவரே ஆட்டநாயகன் விருதை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது போட்டி திருவனந்தபுரத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது.

ராகுல் சாதனை

* இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் இந்த ஆட்டத்தில் வீழ்த்திய 2 விக்கெட்டையும் சேர்த்து அவரது ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 52 ஆக (35 ஆட்டம்) உயர்ந்தது. இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியரான அஸ்வினின் (46 ஆட்டத்தில் 52 விக்கெட்) சாதனையை சமன் செய்தார்.

* இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் 4 ஓவர்களில் 56 ரன்களை விட்டுக்கொடுத்தார். 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய பவுலரின் 3-வது மோசமான பந்து வீச்சு இதுவாகும்.

* இந்திய வீரர் லோகேஷ் ராகுல் 30 ரன்கள் எடுத்திருந்த போது, 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களை (29 இன்னிங்ஸ்) கடந்தார். இந்த மைல்கல்லை வேகமாக எட்டிய 3-வது வீரர் ஆவார். முதல் 2 இடங்களில் பாகிஸ்தானின் பாபர் அசாம் (26 இன்னிங்ஸ்), இந்தியாவின் விராட் கோலி (27 இன்னிங்ஸ்) உள்ளனர்.

* விராட் கோலியின் 94 ரன்கள் அவரது அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்பு 90 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

இந்தியாவின் அதிகபட்ச ‘சேசிங்’

இந்த ஆட்டத்தில் இந்திய அணி 208 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக துரத்திப்பிடித்து (சேசிங்) அமர்க்களப்படுத்தியது. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியாவின் அதிகபட்ச சேசிங் இதுவாகும். இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு மொகாலியில் நடந்த இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 207 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்ததே சிறந்த சேசிங்காக இருந்தது.

வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களின் ‘தாராளம்’

வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர்கள் 3 நோ-பால், 14 வைடு உள்பட 23 ரன்களை எக்ஸ்டிரா வகையில் வாரி வழங்கினர். 3-வது நடுவரின் உதவியுடன் இந்த 3 நோ-பால்களும் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் இந்திய தரப்பில் எந்த நோ-பாலும் வீசப்படவில்லை. 4 வைடு உள்பட 6 ரன்கள் மட்டுமே இந்திய பவுலர்கள் விட்டுக்கொடுத்தனர்.