இலங்கை

வெளிநாட்டு இராஜதந்திரிகளின் அழுத்தத்திற்கு அடிபணிந்தார் மைத்ரி – அதிரடி அரசியல் தீர்மானங்கள் வராதென தகவல் !

அதிரடியான அரசியல் தீர்மானமொன்றை நாளைய தினம் அறிவிக்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தயாராகியிருந்தபோதும் போதும் சில நாடுகளின் இராஜதந்திர அழுத்தத்தால் அந்த அறிவிப்பு திட்டம் மீள்பரிசீலனை செய்யப்பட்டதாக மிக நம்பகரமாக அறியமுடிந்தது.

அதேசமயம் சஜித் பிரேமதாசாவை பிரதமராக அறிவிக்கும் எந்த திட்டங்களும் ஜனாதிபதியிடம் இல்லையென சொல்லப்படுகிறது.

ஆனாலும் – அரசின் பொருளாதாரக் கொள்கைகளை விமர்சித்து விசேட உரையொன்றை நாட்டு மக்களுக்கு ஆற்றவுள்ள ஜனாதிபதி – பிரதமருக்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பாரென்றும் நாட்டு நிலைமையை சீர்செய்ய உடனடி பாராளுமன்ற தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டுமென்பது ஜனாதிபதியின் கருத்தாக இருக்கிறதெனவும் ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அப்படியல்லாத பட்சத்தில் ரணிலின் மீதுள்ள சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இடைக்கால பிரதமர் ஒருவரை நியமிப்பது – அதற்கான பகிரங்க அழைப்பை விடுப்பது ஜனாதிபதியின் உத்தேசமாக இருக்கிறதென அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மைத்ரி அதிரடி அரசியல் தீர்மானமொன்றை எடுக்கப் போவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து சென்ற அழுத்தங்கள் அது விடயத்தில் பெரும் தாக்கத்தை செலுத்தியுள்ளன.

அதன்படி அரசியல் நெருக்கடி ஏற்படுத்தும் அதிரடியான முடிவுகள் எதனையும் மைத்ரி அறிவிக்க மாட்டாரென சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் – ஜனாதிபதி தேர்தலுக்கு முன்கூட்டியே செல்வது குறித்து ஜனாதிபதிக்கு நெருக்கமான தரப்பினர் தேர்தல் ஆணைக்குழுவின் முக்கியஸ்தர்களுடன் உத்தியோகப்பற்றற்ற ரீதியில் ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிகிறது.

எவ்வாறாயினும் மரணதண்டனை குறித்து விசேட அறிவிப்பொன்றை ஜனாதிபதி விரைவில் செய்யவுள்ளதாக மற்றுமொரு தகவல் தெரிவித்தது