Breaking News

வெடிபொருட்களுடன் கைதானவர்களை விடுதலை செய்ய அனுமதி வழங்கிய மைத்ரி – பகீர் தகவல் வெளியானது !

 

சிலாபம் – வண்ணாத்திவில்லு பகுதியில் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் திகதி நடத்தப்பட்ட தேடுதலில் ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் உள்ளிட்ட சந்தேகத்திற்கிடமான பொருட்களுடன் கைது செய்யப்பட்டவர்களில் இருவரை விடுதலை செய்வதற்கான அனுமதியை தாம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிடம் பெற்றுகொண்டாரென குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகர் ஜனக்க மாரசிங்க தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நேற்று (10) சாட்சியமளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நேற்றைய தினம் விசேட அதிரடிபடையின் பிரதம பொலிஸ் பரிசோதகர் ரம்முனி அருண முதலில் சாட்சியமளித்திருந்தார்.

வண்ணாத்திவில்லு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான பகுதியொன்றை சோதனை செய்வதற்கு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வருகைத் தந்துள்ளதாக புத்தளம் விசேட அதிரடி படையின் பதில் கட்டளை அதிகாரியாக கடமையாற்றிய தனக்கு, அப்போதைய குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர தொலைபேசி ஊடாக அறிவித்ததாக தெரிவித்துள்ளார்.

வண்ணாத்திவில்லு – லெக்டோவத்த பகுதியில் தேடுதல்கள் நடத்தப்படவுள்ளதாகவும், அங்கு பாதுகாப்பிற்காக அதிகாரிகளை அனுப்புமாறும் ஷானி அபேசேகர கூறியதாக சாட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, குறித்த பகுதி சோதனைக்கு உட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அங்கிருந்து இராணுவ ஆடைகள், ஆயுதங்கள் உள்ளிட்ட மோசகார செயற்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் மீட்கப்பட்டதாக அவர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களில் லெக்டோவத்த காணி உரிமையாளரின் மகனும் உள்ளடங்கியதாகவும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியளித்த இரண்டாவது சாட்சியாளரான விசேட அதிரடிப் படையின் பொலிஸ் பரிசோதகர் சுரேஷ் பிரியங்கர தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, லெக்டோவத்த பகுதி தொடர்பில் விடயங்களை கண்டறிந்து, அந்த பகுதிக்கு முதலில் சென்ற குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகர் ஜனக்க மாரசிங்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியளித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் திகதி மாலை 3.05க்கு லெக்டோவத்த காணிக்கு தான் சென்றதாகவும், அங்கிருந்த முபிஷ், நவாஷ் மற்றும் சகோதரர்களான நபிக் மற்றும் நவித் ஆகியோரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டதாகவும் அவர் சாட்சி வழங்கியுள்ளார்.

இவ்வாறு நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த நால்வரும் பரஸ்பர பதில் வழங்கிய நிலையில், அவர்களை தான் கைது செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் உள்ளடங்கிய சகோதரர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதா என ஜனாதிபதி ஆணைக்குழு, சாட்சியாளரிடம் வினவியுள்ளது.

இதற்கு பதிலளித்த குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகர் ஜனக்க மாரசிங்க, குறித்த இருவரும் சம்பவத்துடன் தொடர்புப்படாமையினால் தான் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்ததாக கூறினார்.

எவ்வாறாயினும், குறித்த சந்தேகநபர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து இரண்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இதற்கு முன்னர் சாட்சி வழங்கிய விசேட அதிரடிபடை அதிகாரியொருவர் தெரிவித்திருந்ததாக ஆணைக்குழுவின் தலைவர், சாட்சியாளரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

அதற்கு பதிலளித்த சாட்சியாளர், விசேட அதிரடிபடை அதிகாரி இன்றைய தினம் ஆணைக்குழுவிற்கு சாட்சியளிக்கும் வரை தனக்கு அவ்வாறான ஒரு விடயத்தை அறிந்திருக்கவில்லை என குறிப்பிட்டார்.

அவ்வாறென்றால், குறித்த இரண்டு சந்தேகநபர்களையும் விடுதலை செய்யும் வகையில் அவசர முயற்சிகள் ஏதேனும் எடுக்கப்பட்டதா எனவும் ஆணைக்குழு இதன்போது வினவியது.

சகோதரர்களை விடுதலை செய்வதற்கு அவசர முயற்சிகள் எடுக்கப்பட்டதை சாட்சியாளர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ரவி செனவிரத்ன, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஷானி அபேசேகர, உதவி பொலிஸ் அத்தியட்சகர் விக்ரமசேகர ஆகியோர் தொடர்ந்தும் தனக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வந்ததாக சாட்சியாளர் ஆணைக்குழுவிடம் கூறியுள்ளார்.

இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட நபர்கள் தொடர்பில் மேலும் ஆராய்ந்திருக்க வேண்டும் என தற்போது தனக்கு மனதில் தோன்றுதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகர் ஜனக்க மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த சந்தேகநபர்களை விடுதலை செய்வதற்கான அறிக்கையை, தான் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி, அதற்கான அனுமதியை பெற்றுகொண்டதாக சாட்சியாளர், ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியளித்துள்ளார்.