விளையாட்டு

வீதி பாதுகாப்பு உலகத்  தொடரில் டில்சான், முரளி‘வீதி பாதுகாப்பு உலகத்  தொடர்’ என அழைக்கப்படும்  வீதி பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உலகின் முன்னாள் முன்னணி வீரர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, வீரேந்தர் சேவாக் மற்றும் முத்தையா முரளிதரன் உள்ளிட்டவர்களும், ஜக்ஸ் கலிஸ், பிரட் லீ மற்றும்  ஷிவ்நராயன் சந்தரபோல், ஆகியோரும் இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ளனர்

போட்டியின் முதல் சீசன் 2020ஆம் ஆண்டு பெப்ரவரி 2 முதல் 16 வரை மும்பையில் நடைபெறவுள்ளது.

இந்தியா லெஜண்ட்ஸ், அவுஸ்திரேலியா லெஜண்ட்ஸ், தென்னாப்பிரிக்கா லெஜண்ட்ஸ், இலங்கை லெஜண்ட்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் என்ற அடிப்படையில் அணிகள் பெயரிடப்பட்டுள்ளன.

மொத்தம் 110 வீரர்கள் இதில் விளையாடவுள்ளதோடு, அனைவரும் ஓய்வு பெற்றவர்கள் என்பதோடு, இந்த போட்டியில் பங்கேற்பதை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்,

போட்டிகளை நடத்துவதற்காக  2018 ஓகஸ்டில் இந்திய கிரிக்கெட் சபையிடமிருந்து அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வீரர்களின் கொடுப்பனவுகள் அணியின் உரிமையாளர்களுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளதோடு, போட்டிகளிலிருந்து கிடைக்கும் வருமானம் வீதி பாதுகாப்பு திட்டத்தை ஊக்குவிப்பதற்காக பயன்படுத்தப்படவுள்ளது.

வீதி விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியா உலகில் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.