இலங்கை

வீதிக்கு வந்த ரவி – சஜித் சண்டை !

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் அமைச்சர்களுமான ரவி கருணாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் பெரும் கருத்து முரண்பாடு உருவாகி அந்த சண்டை இப்போது வீதிக்கு வந்துள்ளது.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரவி, தாய் தந்தையரின் பெயரை வைத்து எவரும் அரசியல் செய்யக் கூடாதென குறிப்பிட்டிருந்தார்.

அதற்கிடையில் இன்று அம்பாந்தோட்டையில் பேசிய அமைச்சர் சஜித் , சிலர் செல்லும் இடமெல்லாம் வீணாகிப்போவதாகவும் வெளிச்சத்தை எதிர்பார்த்த மக்களுக்கு இருளில் இருக்க வேண்டிய நிலைமை உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.அத்துடன் வங்கிக் கொள்ளை அடித்தவர்களெல்லாம் யோக்கியர்களா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் போட்டியிடத் தீர்மானித்ததையடுத்து சஜித்துக்கும் ரணிலுக்குமிடையில் கருத்து முரண்பாடுகள் எழுந்துள்ளதாகவும் ரணிலின் அனுமதியுடன் தான் ரவி அவ்வாறான கருத்தை முதலில் முன்வைத்திருக்கக் கூடுமென்று ஐக்கிய தேசியக் கட்சி தகவல்கள் சொல்கின்றன.

அதேசமயம் ஜனாதிபதி மைத்ரியுடன் சஜித் நல்ல உறவோடு இருப்பதை விரும்பாத ரணில்,சஜித்துக்கு எதிராக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை தூண்டிவிட்டிருப்பதாக இன்னுமொரு தகவல் தெரிவித்தது.

இப்போதுள்ள நிலைமையில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் அல்லது பிரதமர் வேட்பாளராக வரும் சாத்தியம் சஜித்துக்கு அறவே இல்லையென்றும் கட்சித் தலைமை அதனை தீர்மானித்துவிட்டதாகவும் அந்த தகவலில் சொல்லப்பட்டது.