Breaking News

வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு பிரதமர் அறிவுறுத்தல்

குறைந்தளவிலான வசதி கொண்ட குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான 7 ஆயிரத்து 500 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (14) நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் திட்டங்கள் தொடர்பில் அந்த அதிகாரசபையின் அதிகாரிகளுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே கௌரவ பிரதமர் இவ்வாறு வலியுறுத்தினார்.

அதற்கமைய, இம்மாத இறுதிக்குள் குறித்த வீட்டுத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை ஒப்புதல் தெரிவித்தது.

புதிதாக நிர்மாணிக்கப்படும் 7 ஆயிரத்து 500 வீடுகளில், 4 ஆயிரம் வீடுகள் குறைந்த வசதி கொண்ட குடியிருப்புகளில் வசிப்போரை மீள்குடியேற்றுவதற்காக நிர்மாணிக்கப்படுவதுடன், எஞ்சிய 3 ஆயிரம் வீடுகள் நடுத்தர வர்க்கத்தினருக்காக ஒதுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுத்தர வர்க்கத்தினருக்காக வீடுகளை பெற்றுக் கொடுக்கும் போது குறைந்தபட்ச ஆரம்ப கொடுப்பனவில் வீட்டு உரிமையை பெற்றுக் கொடுக்கும் முறையொன்றை உருவாக்குமாறு பிரதமர் இதன்போது நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.