இலங்கை

விசேட செய்தி ! ரணிலுக்கு பொறி வைத்தது கூட்டமைப்பு..

விசேட செய்தி !
 
ரணிலுக்கு பொறி வைத்தது கூட்டமைப்பு..
அரசின் பட்ஜெட் ஊசலாட்டம் ..!
கல்முனை விவகாரத்தில் முஸ்லிம் காங்கிரஸும் உடும்புப்பிடி…
 
கல்முனை உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாக தரமுயர்த்தினால் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவை வழங்க முடியுமென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனையாலும் – பிரதேச செயலகத்தை தரமுயர்த்தினால் அரசில் இருப்பது குறித்து பரிசீலிக்க வேண்டுமென்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் கடும் நிலைப்பாட்டினாலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடும் அரசியல் நெருக்கடியொன்றை சந்தித்துள்ளார்.
 
நேற்று இந்த விடயம் குறித்து அமைச்சர் வஜிர அபேவர்தன முஸ்லிம் காங்கிரசின் கல்முனை எம் பியும் இராஜாங்க அமைச்சருமான ஹரீஸுடன் பேச்சு நடத்தியாக தெரிகிறது.அதன் பின்னர் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் ஹரீஸுக்கிடையில் சந்திப்பொன்று நடைபெற்றது.
 
பல்வேறு பிரச்சினைகள் நாட்டில் பேசவேண்டிய நிலையில் இருக்கையில் முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையென கருதப்படும் கல்முனைக்கு தனி பிரதேச செயலகம் ஒன்று – கூட்டமைப்பின் பேச்சைக் கேட்டு தரம் உயர்த்தப்படுமானால் அது ஏற்றுக் கொள்ளப்படமுடியாத ஒன்றெனவும் அதைவிட அரசில் இருந்து வெளியேறுவது நல்லதென ஹரீஸ் கட்சித்தலைமைக்கு சொன்னதாகவும் கட்சித் தலைமையும் அதே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அறியமுடிகின்றது.
 
அதேவேளை முஸ்லிம் காங்கிரசின் இந்த நிலைப்பாட்டுக்கு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முஸ்லிம் எம் பிக்களும் ஆதரவை அளிப்பதால் பிரதமர் கடும் அரசியல் நெருக்கடியொன்றை எதிர்நோக்கியுள்ளார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பா அல்லது ஆளுங்கட்சியின் பங்காளிகளா முக்கியம் என்பது குறித்து நேற்று இரவு கட்சி சீனியர்களுடன் பேச்சு நடத்திய ரணில் – இது விடயத்தில் சம்பந்தனும் ஹக்கீமும் பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டுமென தெரிவித்துள்ளார்.
 
இந்த பின்னணியில் இன்று பிற்பகல் முஸ்லிம் காங்கிரஸ் எம் பிக்களுடன் அவசர பேச்சு ஒன்றை நடத்துகிறார் ரணில்….