இலங்கை

விசேட செய்தி ! மீண்டும் ரணில் வேண்டாம் – ஐ.தே. மு பங்காளிக் கட்சிகள் போர்க்கொடி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க போட்டியிட தீர்மானித்துள்ளமை தொடர்பில் ஆளும் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

தனது பிறந்த நாளை முன்னிட்டு சில தினங்களுக்கு முன்னர் அலரி மாளிகையில் நடந்த நிகழ்வில் வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தனது வேட்பாளர் அறிவிப்பை நாசூக்காகச் செய்திருந்தார் பிரதமர் ரணில். அங்கு வந்த அதிதிகளுக்கு ரணிலின் பெருமையைக் கூறும் வகையில் விசேட காணொளி ஒன்றும் காண்பிக்கப்பட்டது.

புலிகளுடனான போரை முடிவுக்கு கொண்டுவந்த ஒரு தலைவர் ரணில் என்றும் அந்த காணொளியில் ஒரு இடத்தில் சொல்லப்பட்டதை அங்கு சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இதர தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கவனித்து தமக்குள் விசனம் வெளியிட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது..

இப்படியாக பிரசாரங்களை செய்து ஜனாதிபதித் தேர்தலுக்கு ரணில் தயாராகியுள்ளதை அதிருப்தியுடன் எதிர்கொண்டுள்ள ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் ,ரணில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் ஆதரவை வழங்குவது குறித்து மீள்பரிசீலனை செய்யவேண்டிவருமென தெரிவித்துள்ளதாக தகவல்.

சிறுபான்மை மக்களின் ஆதரவு கிடைத்தாலும் பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகள் கிடைக்க ஐக்கிய தேசியக் கட்சி கரு ஜெயசூரியவையோ அல்லது சஜித்தையோ நிறுத்தவேண்டுமென இந்த பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்துள்ளனர்.