இலங்கை

தேசிய அரசமைக்க தயாராகும் ரணில் – பச்சைக்கொடி காட்டிய மைத்ரி !

 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினரை சேர்த்துக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் அதிருப்தியாளர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் தேசிய அரசொன்றை அமைக்க திட்டமிட்டுள்ள பிரதமர் ரணில்,அமைச்சரவையை விஸ்தரிப்பதற்கான விசேட பிரேரணையொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராகி வருகிறார்.

அரசியலமைப்பின்படி அமைச்சர்களின் எண்ணிக்கையை 30 பேருக்கு மேல் அதிகரிக்க தேசிய அரசு இருக்க வேண்டும். அமைச்சரவையை அதிகரிக்கும் பிரேரணைக்கு குறைந்தபட்ச பாராளுமன்ற பெரும்பான்மை ஆதரவு இருக்க வேண்டும்.

இந்த பின்னணியில் சுதந்திரக்கட்சியில் இருந்தபடி ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவை வழங்கும் உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியில் அமைச்சுப் பதவி கிடைக்காதவர்கள் ஆகியோரை திருப்திப்படுத்தும் வகையில் அமைச்சரவையை விஸ்தரிப்பதற்கும் அதற்கான விசேட பிரேரணையை பாராளுமன்றத்தில் முன்வைக்கவும் பிரதமர் தீர்மானித்துள்ளதாக தகவல்.

அமைச்சரவை அதிகரிப்பு தொடர்பில் கடந்த வாரம் முக்கிய சந்திப்பொன்றை நடத்திய பிரதமர் ரணில் தேசிய அரசு தொடர்பான தனது யோசனைக்கு ஜனாதிபதி தரப்பில் இருந்து பெரிய எதிர்ப்பு வராதென சூசகமாக தெரிவித்துள்ளார்.

”அமைச்சர் றிஷார்ட் பதியுதீனுக்கு திறன் அபிவிருத்தி தொழிற்பயிற்சி அமைச்சை வழங்க முன்னர் ஜனாதிபதி கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.ஆனால் அண்மையில் அதனை வழங்க அனுமதித்திருந்தார்.இப்போது இதனை அவர் எதிர்க்க வாய்ப்பில்லை…”என்று இந்தக் கூட்டத்தில் கருது வெளியிட்டுள்ளார் ரணில்…

அமைச்சரவை விஸ்தரிக்கப்படும்போது ஏற்கனவே கூடுதல் பொறுப்புக்களை கொண்டுள்ள அமைச்சர்களின் பதவிகள் மீளப் பெறப்படுமென தெரிகிறது.

இதற்கிடையில் அமைச்சரவை உறுப்பினர்களை அதிகரிக்கும் நோக்கில் மட்டும் தேசிய அரசு அமைவது குறித்து ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் அதிருப்தியை வெளியிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது .