இலங்கை

விசேட செய்தி ! டெஸ்ட் கெப்டனுக்கு பொலிஸ் பிணை வழங்கியதில் சர்ச்சை – தனக்கு தெரியாது என்கிறார் ட்ரெப்பிக் டீ.ஐ.ஜி அஜித் ரோஹண !

இன்று அதிகாலை வாகன விபத்தில் சிக்கிய டெஸ்ட் கிரிக்கெட் கெப்டன் திமுத் கருணாரத்னவுக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட்டமை குறித்து தனக்கு எதுவுமே தெரியாது எனக் கையை  விரிக்கிறார் பொலிஸ் போக்குவரத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண.

திமுத் போதையில் இருந்தார் என்கிறீர்கள்? ஆனால் சாதாரண ஒருவர் இப்படி சிக்கி இருந்தால் நீதிமன்றத்தில் ஆஜர் பண்ணாமல் பொலிஸ் பிணையில் விட்டிருப்பீர்களா ? என்று “தமிழன்” செய்திச் சேவை கேட்டபோதே டீ ஐ ஜி ரோஹன இப்படி தெரிவித்தார்.

“ உண்மையில் நீங்கள் கூறுவது நியாயம் தான்.பொரளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இப்படியான முக்கிய விடயம் குறித்து என்னை அவர் தொடர்பு கொள்ளவில்லை .எனக்கு தெரியாமல் தான் பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளது.” என்று மேலும் குறிப்பிட்டார் அஜித் ரோஹண .

இதற்கிடையில் பொலிஸ் பிணை வழங்கிய இந்த விவகாரம் குறித்து பொலிஸ் மா அதிபர் கவனம் செலுத்தியிருப்பதாக தெரிகிறது.

திமுத்துக்கு பொலிஸ் பிணை வழங்கிய விடயம் சர்ச்சையாகியுள்ள நிலையில் நாளை காலை அவர் கொழும்பு போக்குவரத்து நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகக் கூடுமென பிறிதொரு தகவல் தெரிவித்தது.