இலங்கை

வாக்குறுதி தந்த அரசியல் தலைமைகள் அனைவரும் எம்மை கைவிட்டுள்ளனர் -கேப்பாபுலவு மக்கள் கவலை !

 

-வன்னி செய்தியாளர் –

விரைவில் கேப்பாபுலவு மக்களின் நிலங்களை பெற்றுத்தருவோம் என வாக்குறுதி தந்த அரசியல் தலைமைகள் அனைவரும் காணாமல் போயுள்ளதாகவும் தம்மை கைவிட்டுள்ளதாகவும் தமது சொந்த நிலங்களுக்காக போராடிவரும் கேப்பாபுலவு மக்கள் கவலை தெரிவித்துள்ளனர் .

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் தொடர் நில மீட்பு போராட்டம் இன்றுடன் (10) 863 நாட்களாக கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலைமையகத்துக்கு முன்பாக இடம்பெற்றுவருகின்றது . கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் திகதி ஆரம்பமான போராட்டம் இன்றுவரை தொடர்ந்தது இடம்பெற்றுவருகின்றது .

மக்களின் தொடர் போராட்டத்தின் பலனாக ஒருதொகுதி காணிகள் கடந்த 2018 ஜனவரி முதலாம் திகதி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவம் அபகரித்து வைத்துள்ள தமது ஏனைய சொந்த நிலங்களையும் விடுவிக்குமாறு கோரி மக்கள் தொடர்ந்த்தும் போராடி வருகின்றனர் .

இந்த நிலையில் தாம் போராட்டம் நடத்திவரும் நேரத்தில் தம்மிடம் வந்து பல வாக்குறுதிகளை தந்த தமிழ் அரசியல் தலைமைகள் காணாமல் போயுள்ளதாகவும் தம்மை கைவிட்டுள்ளதாகவும் கேப்பாபுலவு மக்கள் கவலை தெரிவித்துள்ளனர் . இது பற்றி கருத்து வெளியிட்டுள்ள கேப்பாபுலவு மக்கள் –

கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராசா கேப்பாபுலவு மக்களின் நிலங்கள் விடுவிக்கப்படாவிட்டால் அந்த மக்களுடன் இணைந்து தாமும் போராட்டத்தில் குதிப்போம் என தெரிவித்திருந்தார் . அத்தோடு ஒருமாதகாலத்தில் கேப்பாபுலவு மக்களின் நிலங்களை பெற்றுத்தருவோம் என சம்பந்தன் ஐயாவும் எம்மிடம் தெரிவித்திருந்தார் .ஆனால் ஒருவரையும் இன்னும் காணவில்லை அனைவரும் எம்மை கைவிட்டுள்ளனர் .

எமக்கு கிடைத்துள்ள தமிழ் ஆளுநர் சுரேன் ராகவன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எம்மை சந்தித்து இது கேப்பாபுலவு மக்களுடன் எனது இறுதி சந்திப்பு இனி இராணுவத்துக்கும் மக்களுக்கும்தான் கதை என தெரிவித்துவிட்டு சென்றார் . இன்றுவரை எமக்கு அவர்கூட தீர்வு தரவில்லை நாம் ஏன் இராணுவத்துடன் பேச வேண்டும் ? நாம் எம்முடைய வல்லமையின் காரணமாக போராடுகின்றோம் . நாம் இராணுவத்துடன் பேச வேண்டியதில்லை அந்த வேலையை செய்யவேண்டியவர் ஆளுநர்தான் எனவே முடிந்தால் அந்த வேலையை செய்து எமது நிலத்தை எமக்கு பெற்றுத்தாருங்கள் .

நாம் இன்று உள்ள அவசரகால சூழ்நிலையில் இராணுவ முகாமுக்கு முன்பாக அச்சத்துடன் போராடி வருகின்றோம் . எமக்கு ஆதரவு வழங்க வருபவர்களுக்கும் இராணுவம் வேண்டும் என்றே கெடுபிடிகளை விதிக்கின்றது . எமது நிலங்களில் உள்ள வருமானங்களை எமது கண்முன்னே இராணுவம் அனுபவிக்கின்றது .நாம் போர் முடிந்து 10 வருடங்களின் பின்னரும் இன்றும் அகதி வாழ்க்கை வாழுகின்றோம் . இராணுவ எமது சொந்த நிலத்தில் இருக்க நாம் இன்னும் மாதிரிகிராமத்தில் வாழுகின்றோம் வரட்சி வாட்டி வதைக்கின்றது . எந்த தொழிலும் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது .சொந்த நிலங்களை இராணுவம் பறித்துவைத்திருக்க நாம் அடுத்தவரிடம் கையேந்தி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது . எமது நிலம் எமக்கு வேண்டும் விரைவில் அந்த நிலம் எமக்கு கிடைக்க வேண்டும் அதுவரை நாம் போராடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர் .