இலங்கை

வன்முறையில் ஈடுபட்ட யாழ்ப்பாண இளைஞர்கள் திருந்தி வாழ்கின்றனர் – வடக்கு டீ ஐ ஜி ரொசாந்த்

 

– யாழ்.செய்தியாளர் –

” யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஆவா குழுவினை சேர்ந்த இளைஞர்கள் தற்போது திருந்தி சமூகத்தில் நல்ல பிரஜைகளாக வாழ்ந்து வருகின்றனர்.அந்த பெருமையுடன் வடக்கில் இருந்து செல்கின்றேன் ” என வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் ரொசாந்த் பெர்னாண்டோ தெரிவித்தார்.

வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றி வந்த அவர் தென் மாகாணத்துக்கு இடமாற்றம் பெற்று செல்லவுள்ளார்.இந்நிலையில் காங்கேசன்துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துகளை பகிரும்போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,

வடக்கு மாகாணம் போருக்கு பின்னர் அமைதியாக இருந்தது.பின்னர் சில இளைஞர்கள் குழுக்களாக இணைந்து வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.அவ்வாறான இளைஞர் குழுக்களுக்கு ஒவ்வொரு பெயர்களும் இருந்தன.இதனால் வடக்கில் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்கள் அரங்கேறின.

இந்த குற்றச்செயல்களை கட்டுப்படுத்த பல பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டன . அவர்கள் வன்முறையில் ஈடுபட அதற்கு உதவிய நபர்களை கைது செய்தனர்.எனினும் அவர்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்க யாரும் வருவதில்லை.அதனால் வெளியில் வந்து விடுகின்றனர்.அவ்வாறு வருபவர்கள் தாம் இனிமேல் இவ்வாறான வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபடமாட்டோம் என உறுதியளித்துள்ளனர்.அத்துடன் அவர்கள் திருந்தி வாழ்ந்தும் வருகின்றனர். – என்றார்