உலகம்

வட்போட்டில் ஆரம்பமானது நேட்டோ  உச்சி மாநாடுபிரித்தானிய தலைநகர், லண்டனின் புறநகர்பகுதியான வட்போட்டில் ஆரம்பமான, நேட்டோ அமைப்பின் உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உட்பட்ட நேட்டோ நாடுகளின் அரச தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

அண்மையில் நேட்டோ அமைப்பு குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து இந்த மாநாட்டில் அதிர்வுகளை ஏற்படுத்திய நிலையில் மக்ரன் தெரிவித்த கருத்திற்கு ட்ரம்ப் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

உலகின் மிகப் பலம்பொருந்திய இராணுவக் கட்டமைப்பைக்கொண்ட நேட்டோவின் 70ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் பிரித்தானியாவின் வட்போட் நகரில் ஆரம்பித்த நேட்டோ நாடுகளின் உச்சி மாநாட்டில் 29 நேட்டோ நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாடு இன்றும் இடம்பெறவுள்ள நிலையில் அதன்பின்னணியில் நேட்டோ தலைவர்களுக்கு இடையிலான தனித்தனியான சந்திப்புகளும் இடம்பெற்று வருகின்றன.

நேட்டோ அமைப்பு மூளைசாவடைந்த நிலையில் இருப்பதாக இமானுவேல் மக்ரன் கடந்த சிலவாரங்களுக்கு முன்னர் தெரிவித்த கருத்து பலமான அதிர்வுகளை நேட்டோவில் ஏற்படுத்திய நிலையில் அதற்குரிய கண்டனங்களும் வெளியிடப்பட்டன.

பிரான்ஸ் அரச தலைவர் இமானுவேல் மக்ரனுடனான பேச்சுக்களுக்கு முன்னர்  இது குறித்து கருத்துவெளியிட்ட அமெரிக்க ஜனாதிபதி நேட்டோ குறித்த மக்ரனின் கருத்து அந்த அமைப்பை அவமானப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

நேட்டோவின் உறுப்பு நாடுகள் வழங்கவேண்டிய நிதி உதவி அதிகரிப்பு குறித்தும் இந்த மாநாட்டில் ஆராயப்படுகின்றது.

இந்த உச்சிமாநாட்டில் ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானிய மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்கள் சிரிய நிலைமை குறித்து விவாதிக்க ஒரு கூட்டத்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.