Breaking News

லெபனானில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பத்தில் இலங்கை தூதரகத்திற்கு சேதம்

லெபனானின் தலைநகரான பெய்ருட்டில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் அங்குள்ள இலங்கை தூதரகத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் குறித்த தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பணியாளர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என லெபனானுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் தொலைவில் இலங்கைத் தூதரகம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத் தொழிற்சாலையொன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை நேரப்படி இரவு 08.30 மணியளவில் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியது.

லெபனான் தலைநகரை உலுக்கிய குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் 4000 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மீட்பு பணியாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.