உலகம்

லிபியாவில் தொடரும் உள்நாட்டுப் போர் – உயிரிழப்புக்களும் தொடர்கின்றன

லிபியாவில் அரசுக்கு எதிராக போராடி வரும் புரட்சிகர லிபிய இ ராணுவத்தின் தளபதி காலிபா ஹிப்தர் தனது படைகளை தலைநகர் திரிபோலியை நோக்கி முன்னேறும்படி கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐ.நா. ஆதரவு பெற்ற அரச படை வீரர்கள் திரிபோலியில் குவிந்தனர். எனினும் புரட்சிகர லிபிய ராணுவத்தினர் அங்கு விரைந்தனர்.

கடந்த சில தினங்களாக இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல் நடந்து வருகிறது. இந்த மோதலில் இதுவரை 21 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அதே சமயம் இருதரப்பு மோதலில் 14 வீரர்களை இழந்துவிட்டதாக புரட்சிகர லிபிய ராணுவம் கூறுகிறது. மேலும் 100–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருதரப்பினர் இடையிலான கடுமையான மோதல் காரணமாக தலைநகர் திரிபோலியில் பதற்றமான சூழல் நீடிக்கிறது. மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கிறார்கள்.

இதற்கிடையில், திரிபோலியின் தெற்கு பகுதியில் உள்ள ராணுவ தளத்தை புரட்சிகர லிபிய ராணுவத்தினர் நேற்று கைப்பற்றினர். அவர்களிடம் இருந்து ராணுவ தளத்தை மீட்கும் முயற்சியில் அரசு படைகள் ஈடுபட்டுள்ளன.

வடக்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் 34 ஆண்டுகள் நிர்வகித்த கடாபிக்கு எதிராக 2011–ம் ஆண்டு உள்நாட்டுப் போர் வெடித்தது.

அவர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதோடு, கொலை செய்யப்பட்டார். அத்துடன் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் 2015–ம் ஆண்டு ஐ.நா. ஆதரவுடன் தேசிய இடைக்கால பேரவையின் கீழ் ஆட்சி அமைந்தது.

எனினும் அங்கு தொடர்ந்து அரசியலில் நிலையற்ற தன்மை உருவானது. இதனால் அதே ஆண்டு லிபியாவில் மீண்டும் அரசுக்கு எதிராக உள்நாட்டுப் போர் மூண்டது.

இது ஒருபுறம் இருக்க ஐ.எஸ். உள்பட பல்வேறு அமைப்புகளும் அங்கு காலூன்றி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் லிபியாவில் தொடர்ந்து அசாதாரண சூழல் நிலவி வருகிறது.