இலங்கை

ரிஷார்ட் எனக்கு அழுத்தங்களை வழங்கவில்லை – இராணுவத் தளபதி தெரிவிப்பு !

 

“கைது செய்யப்பட்ட எவரையும் விடுதலை செய்யுமாறு யாரும் எனக்கு அழுத்தங்களை வழங்கவில்லை. ரிஷார்ட் என்னிடம் விபரங்களை கேட்டாலும் கைது செய்யப்பட்டவரை விடுதலை செய்ய அவர் எந்த அழுத்தங்களையும் வழங்கவில்லை

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இன்று சாட்சியமளித்தபோது இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க இவ்வாறு குறிப்பிட்டார்.

தாக்குதல் சம்பவத்தின் பின்னர் அரசியல்வாதி அல்லது ஒரு தனிநபர் விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனரா என்று தெரிவுக்குழு குழு இராணுவத் தளபதியிடம் கேள்வி எழுப்பியது. அப்போது மேற்கண்டவாறு குறிப்பிட்ட இராணுவத் தளபதி மேலும் கூறியதாவது,

இந்த சம்பவத்திற்குப் பிறகு, ஏப்ரல் 21 ஆம் தேதி, நான் இராணுவத்தை பாதுகாப்பில் ஈடுபட வைத்தேன். நான் வழங்கிய அறிவுறுத்தல்கள் மற்றும் அதிகாரங்கள் கொண்டு இராணுவம் சோதனைகள், தேடல்கள் மற்றும் கைதுகளை மேற்கொண்டது.

ஏப்ரல் 26 ஆம் தேதி, தெஹிவளையில் இஷாம் அகமது என்ற நபர் கைது செய்யப்பட்டார். ரிஷாத் பதியுதீன் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பைக் கொடுத்தார். எனக்கு அமைச்சரைத் தெரியும். இந்த நாடாளுமன்றத்தில் பல எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களை ராணுவ தளபதியாக நான் அறிவேன். அது நாட்டு மக்களுக்கும் தெரியும். எனவே அவர்கள் என்னை தனிப்பட்ட முறையில் பேச அழைக்கிறார்கள். மற்ற நிகழ்வுகளைப் பற்றியும் அவர் என்னிடம் பேசியுள்ளார். அன்று அவர் என்னை அழைத்து இந்த பெயருள்ள நபர் கைது செய்யப்பட்டாரா என்று கேட்டார். அந்த நேரத்தில் நான் தெரியவில்லை என்றும் பின்னர் பார்த்து தகவல் தருகிறேன் என்றும் குறிப்பிட்டேன்.

இரண்டாவது முறையாக அவர் அழைத்தபோது நான் இன்னும் தேடுகிறேன் என்று சொன்னேன், அந்த நேரத்தில் என்னால் பதிலளிக்க முடியவில்லை. அந்த நேரத்தில் கொழும்பில் விசேட அதிரடிப்படை செயல்பட்டு வந்தது . இந்த பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டாரா என்று நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள் அதனை ஆம் என்று உறுதி செய்தனர்.

அவர் ( ரிசார்ட் ) மாலையில் மீண்டும் பேசியபோது, ​​”ஆம், அப்படி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.. ஒன்றரை வருடங்கள் கழித்து இந்த அழைப்பை நீங்கள் எனக்கு வழங்க வேண்டும்” என்று சொன்னேன்.

அந்த அதிகாரத்தால் கைது செய்யப்பட்ட எந்தவொரு நபரையும் 24 மணி நேரத்திற்குள் TID க்கு ஒப்படைக்க வேண்டும். பயங்கரவாத விசாரணைக்கு அவரை ஒன்றரை ஆண்டு வரை தடுத்துவைக்க முடியும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவர் ஒருபோதும் எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை

குழு உறுப்பினர் – வேறு யாராவது உங்களுக்கு அழுத்தங்களை வழங்கினார்களா?

இராணுவத் தளபதி – ஜனாதிபதியோ பிரதமரோ இதுவரை எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை.

இராணுவத் தளபதியிடமிருந்து சாட்சிகள் சேகரிக்கத் தொடங்கிய சுமார் 18 நிமிடங்களுக்குப் பிறகு, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஒரு கேள்வியை எழுப்பினார்.

பொன்சேகா: ஐ.எஸ்.ஐ.எஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்ள உளவுத்துறை மறுசீரமைப்புக்கு எவ்வளவு காலம் ஆகும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

ரவி கருணநாயக்க: பீல்ட் மார்ஷல் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்டார். எனவே ஊடகங்களை இங்கிருந்து வெளியேற்றுவோம்.

குழு உறுப்பினர் – பத்திரிகையாளர்களே, தயவுசெய்து இதற்கு இடம் விடுங்கள். இது ஒரு முக்கியமான பிரச்சினை என்று நாங்கள் நினைக்கிறோம். எனவே இங்கிருந்து வெளியேறுங்கள்.

( பாதுகாப்பு விடயங்கள் வெளிப்பட்டதால் அந்த சாட்சியம் முடியும்வரை ஊடகவியலாளர்கள் வெளியில் இருக்க கேட்கப்பட்டனர்.)