இலங்கை

ரிஷார்ட்டுக்கு எதிரான பிரேரணையை ஆதரிக்க ரெலோ முடிவு !

 

அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ரெலோவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்திருப்பதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சிறீகாந்தா தெரிவித்தார்.

இன்று வவுனியாவில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற தலைமைக்குழு கூட்டத்தின் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்,

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அடிப்படை இயக்கத்தின் தாக்குதல்களின் விளைவாக ஒட்டுமொத்த இலங்கை நாடும் ஒரு அசாதாரணமான சூழ்நிலைகுள்ளாக்கி தொடர்ந்து சிக்கி கொண்டு இருக்கின்றது. அமைச்சர் ரிசாட் பதியுதீன் மீது அவநம்பிக்கையை தெரிவித்து நாடாளுமன்றத்திலே சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்ற பிரேரணை தொடர்பிலே தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக இன்று வவுனியாவில் நடந்த தலைமைக்குழு கூட்டத்திலே விரிவாக விவாதித்து முடிவு ஒன்று எட்டப்பட்டிருக்கின்றது.

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத தாக்குதல்களிலேயே கிட்டத்தட்ட 250 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குழந்தைகள் பெண்கள் உட்பட பெறுமதிமிக்க உயிர்கள் பலியாகியிருக்கின்றன.

கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். இவர்களிலே பலர் படுகாயங்களுக்குள்ளாகி இருக்கின்றனர். இந்தப் பின்னணியிலேயே தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளும், விசாரணை நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்ற சூழ்நிலையிலே இந்த நாட்டின் அரசாங்கத்திலே அமைச்சராக இருக்கின்ற ஒருவர் மீது இந்த விவகாரத்தினை அடிப்படையாக வைத்து இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் பிரேரிக்கப்பட்டிருக்கின்றது.

ஐ.எஸ்.ஐஎஸ் பயங்கரவாத தாக்குதல் நடவடிக்கைகளோடு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ அல்லது அந்த தாக்குதல்களோடு ஏதாவது ஒரு விதத்திலே சம்பந்தப்பட்டிருக்கின்ற நபர்களோடு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புகள் இருந்தன என்ற அடிப்படையிலேயே இந்த பாரதூரமான புகார்கள் நாடு தழுவிய அளவிலேயே கடந்த சில வாரங்களாக இந்த தாக்குதல்களை தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கின்றன. இது சாதாரணமான விடயமல்ல.

அரசியல் சாசனத்தின் கீழ் பதவி வகிக்கின்ற ஒரு அமைச்சர், அரசியல் சாசனத்தை பேணிப் பாதுகாப்பேன் என்று சத்தியப்பிரமாணம் எடுத்திருக்கின்ற அமைச்சருக்கு எதிராக முன்னெப்பொழுதும் இல்லாதவாறு குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. பாரதூரமான குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டிருக்கின்ற நிலைமையில் பூரணமான பாரபட்சமற்ற விசாரணை இந்த விவகாரத்திலேயே தேவைபடுத்தப்படுகின்றது.

இதுவரையிலே அமைச்சர் அவர்கள் இந்தக் குற்ற புகார்கள் தொடர்பிலே எந்த விசாரணைக்கும் உட்படுத்தப்படவில்லை என்பது உலகம் அறிந்த உண்மை. நீதியான பாரபட்சமற்ற விசாரணை ஒன்றுக்கு இந்த குற்றபுகார்கள் தொடர்பிலே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் முகம் கொடுத்தாக வேண்டும் என்பதில் எங்களுடைய கட்சி இந்த நாட்டின் மக்களை போலவே உறுதியாக இருக்கின்றது. இதில் எந்த ஒரு சமரசத்துக்கு விட்டுக்கொடுப்புக்கும் இடம் கொடுக்க மாட்டாது. சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையிலேயே இந்த விவகாரத்தை நாங்கள் அணுகி இருக்கின்றோம்.

ஆனால் அமைச்சர் பதவியிலே தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கின்ற நிலைமையிலேயே ஒரு நீதியான பாரபட்சமற்ற ஒரு விசாரணையை இந்த விவகாரத்திலே நடாத்த முடியும் என்று நாம் நினைக்கவில்லை. பகுத்தறிவுள்ள எவரும் நினைக்க மாட்டார்கள் என்றுதான் நாங்கள் கருதுகின்றோம்.

ஆகவேதான் இதுவரையில் பதவி விலகி இருக்க வேண்டிய அமைச்சர்; ஜனநாயக சம்பிரதாய அடிப்படையிலேயே உலகமளாவிய அளவிலேயே நீண்ட நெடுங்காலமாக ஜனநாயக நாடுகளிலே பின்பற்றப்பட்டு வருகின்ற பாரிய ஜனநாயகங்களின் சம்பிரதாயங்களின் அடிப்படையிலேயே பதவி விலகி இருக்க வேண்டிய அமைச்சர் இப்பொழுதாவது அவர் பதவியை துறக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு.

அவர் அவ்விதம் ராஜினாமா செய்யவில்லையெனில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். அது மாத்திரமல்ல உடனடியாக அவர் தொடர்பிலேயே சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும். விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இவை நடைபெறவில்லை எனில் ஒன்றில் அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

அவர் பதவியில் நீடிப்பாராக இருந்தால் இந்த அவநம்பிக்கை பிரேரணையிலேயே எங்களுடைய கட்சியினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்ற முடிவினை நீண்ட கருத்து பரிமாற்றங்களுக்கு பிறகு, விவாதங்களுக்குப் பிறகு எங்களுடைய தலைமைக்குழு எடுத்து இருக்கிறது என்பதை அறிவிக்க நாங்கள் கடமைப்பட்டிருக்கின்றேன்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களைப்போலவே கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா அவர்கள் தொடர்பிலும் இதே விவகாரம் தொடர்பில் பாரதூரமான குற்ற புகார்கள் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கின்றன. கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா அவர்களும் பதவியை இப்போதாவது அவர் ராஜினாமா செய்ய வேண்டும். தவறினால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

இந்த கோரிக்கையை நாங்கள் முழு நாட்டுக்கும் முன்பாக முன்வைக்க கடமைப்பட்டிருக்கின்றோம். இந்த நாட்டின் மக்களுடைய உயிர்கள் பெறுமதிமிக்க உயிர்கள் கண்மூடித்தனமான பயங்கரவாத மிருகத்தனமான தாக்குதல்களிலே கொல்லப்பட்டிருக்கின்ற துயரமான சம்பவங்களின் பின்னணியிலே பொறுப்புமிக்க ஒவ்வொருவரும் இந்த விவகாரம் தொடர்பிலே தங்கள் கடமைகளை செய்ய வேண்டிய ஒவ்வொருவரும் அதைச் செய்தாக வேண்டும்.

இதில் நட்பு, நாகரிகம், தயவு, தாட்சணியம் என்ற விடயங்களுக்கு இடமில்லை. இது இந்த இலங்கைத்தீவு முன் எப்பொழுவதும் சந்தித்திராத நிலைமை. ஆகவே ஒரு பொறுப்பான அரசியல் கட்சி என்ற முறையில் ஜனநாயக ரீதியான அரசியலமைப்பு என்ற முறையிலேயே நாங்கள் எங்கள் கோரிக்கையை முன் வைக்கின்றோம்.

இவர்கள் இருவரும் – ரிஷாட் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா- தங்கள் பதவிகளிலே தொடர்ந்து இருக்க அனுமதிக்கப்படக் கூடாது. அவர்கள் ராஜினாமா செய்யவில்லையெனில் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

ரிஷாத் பதியுதீனை பொறுத்தமட்டிலே அவர் பதவியிலே தொடர்ச்சியாக நீடிப்பாராக இருந்தால் நிச்சயமாக இந்த அவநம்பிக்கை பிரேரணை ஊடாக அவர் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. எங்களுடைய கட்சி தன்னுடைய கடமையை துணிவோடும், தயவுதாட்சண்யமுமின்றி, நேர்மையாக, பாரபட்சமின்றி செய்யும் என்பதை இந்த சந்தர்ப்பத்திலேயே உறுதியோடு எங்களுடைய கட்சியின் சார்பிலேயே என் அருகில் அமர்ந்திருக்கும் எமது கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உடைய சம்மதத்தோடும், கட்சியின் சார்பிலும் நான் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன் என்றார்.