உலகம்

ராதாரவியை நீக்கியது திமுக

 

நயன்தாரா, கதையின் நாயகியாக நடித்துள்ள கொலையுதிர்காலம் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்த போது அதில் பங்கேற்று பேசிய ராதாரவி, நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார். முன்பெல்லாம் கடவுள் வேடத்தில் கே.ஆர்.விஜயா தான் நடிப்பார். ஆனால் இன்றைக்கு யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்றாகி விட்டது. பார்த்தவுடன் கும்பிடுவது போல இருப்பவர்களும், பார்த்ததும் கூப்பிடுபவர்கள் போல் உள்ளவர்களும் கடவுள் வேடத்தில் நடிக்கிறார்கள். காரணம் ரசிகர்கள் யார் நடித்தாலும் ரசிக்கத் தொடங்கி விட்டார்கள் – என்றார்.

கண்டனம்

ராதாரவியின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. ராதாரவி, சின்மயி, விக்னேஷ் சிவன், விஷால் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தனர்.

விக்னேஷ் சிவன் கண்டனம்

விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ள ட்விட்டரில் – ” பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையைத் தொடர்ந்து நிலைத்திருக்கும் வகையில் ராதாரவி போன்ற ஆண்கள் புனிதப்படுத்துகிறார்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, மரியாதைக்குரிய தலைவர்கள் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்துக்கு எதிராக கடுமையாகக் குரல் கொடுத்தார்கள். ஆண் இனவாதம் பிடித்த, பெண்களுக்கு எதிராகச் செயல்படும் ராதாரவிக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை ஏன் எடுக்கக்கூடாது. தயவுகூர்ந்து இதை கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பதிவிட்டார்.

ஸ்டாலின் கண்டனம்

திமுக., தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், “பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் ராதாரவியின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என பதிவிட்டார்.

அதிரடி நீக்கம்

இந்நிலையில், தி.மு.க., விலிருந்து ராதாரவி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வருவதாலும் தி.மு.க., விலிருந்து ராதாரவி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

வருத்தம் தெரிவித்த ராதாரவி

இது குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் ராதாரவி, “என்னால் திமுக.,விற்கு பாதிப்பு என்றால் கட்சியில் இருந்து விலகிக் கொள்கிறேன். நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனிடம் வருத்தம் தெரிவிக்கிறேன். கொலையுதிர் காலம் பட விழாவில் நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.