விளையாட்டு

ரஷீத் கான் தலைவரானார்

 

ரஷீத் கான் ஆப்கானிஸ்தான் அணியின் அனைத்து கிரிக்கட் போட்டிகளுக்கு தலைவராக செயற்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் முன்னாள் அணித்தலைவர் அஸ்கர் ஆப்கான் அவரது உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

குல்படின் நாயபின் தலைமையில் உலகக் கிண்ண தொடரில் ஆப்கானிஸ்தான் அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்த பின்னர் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது டி20 போட்டிகளில் பந்துவீச்சு தரவரிசையில் முதலிடத்திலும், ஒருநாள் தரவரிசையில் 8வது இடத்திலும் இருக்கும் ரஷீத், உலகக்கிண்ணத்தில் சிறப்பாக செயற்படவில்லை.

எட்டு இன்னிங்ஸ்களில், 69.33 சராசரியாக வெறும் ஆறு விக்கெட்டுகளை மட்டுமே அவரால் கைப்பற்ற முடிந்தது.

மான்செஸ்டரில் இங்கிலாந்துக்கு எதிராக, அவர் தனது ஒன்பது ஓவர்களில் 110 ஓட்டங்களைக் கொடுத்ததுடன், ஒருநாள் போட்டியில் ஒரு பந்து வீச்சாளர் எதிரணிக்கு விட்டுக்கொடுத்த இரண்டாவது அதிக ஓட்டங்கள் இதுவாகும்.

20 வயதான ரஷீத், கடந்த ஆண்டு சிம்பாப்வேயில் நடந்த உலகக் கிண்ண தகுதிச் சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.