உலகம்

மோடி அமைச்சரவையில் புதிய முகங்களுக்கு வாய்ப்பு!

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டதை அடுத்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜக எம்.பி.க்கள் கூட்டம் தில்லியில் இன்று நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் நரேந்திர மோடி, பிரதமராக மீண்டும் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

தற்போதைய அமைச்சரவையில் உள்ள ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, ரவிசங்கர் பிரசாத், பியூஷ் கோயல், நரேந்திர சிங் தோமர், பிரகாஷ் ஜாவடேகர் உள்ளிட்டோர் புதிய அமைச்சரவையில் இடம்பெறவுள்ளனர்.

பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனை, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் புதிய அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும், மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கம், ஒடிஸா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் குறிப்பிடத்தக்க அளவில் பாஜக வெற்றி பெற்றுள்ளதால், அந்த மாநிலங்களைச் சேர்ந்த புதுமுகங்களுக்கு மத்திய அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிகிறது.

குறிப்பாக மத்திய அமைச்சரவையில் 50% அமைச்சர்கள் புதிய முகங்களாக இருப்பார்கள் என்றும், இந்தியாவின் கிழக்கு மற்றும் தெற்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு குறிப்பிடத்தக்க இடம் வழங்கப்படும் என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜக எம்.பி.க்கள் கூட்டம் தில்லியில் சனிக்கிழமை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் நரேந்திர மோடி, பிரதமராக மீண்டும் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜக எம்.பி.க்கள் அனைவரும் சனிக்கிழமை மாலைக்குள் தில்லி வர வேண்டும் என்று கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து ஆட்சியமைப்பதற்கு பிரதமர் மோடி உரிமை கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

30-இல் பதவியேற்பு: பிரதமர் மோடி வரும் 30-ஆம் தேதி பதவியேற்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விழாவில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாராணசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி 4.75 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் மோடிக்கு 6,69,602 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜவாதி வேட்பாளர் ஷாலினி யாதவுக்கு 1,93,848 வாக்குகளும் கிடைத்தன. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அஜய் ராய் 1,51,800 வாக்குகளைப் பெற்றுள்ளார். கடந்த 2014-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாராணசியில் 3.37 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி வெற்றி பெற்றிருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி வரும் 30-ஆம் தேதி பதவியேற்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்பாக, அவர் வாராணசி சென்று தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கவும், காந்திநகருக்குச் சென்று தனது தாயாரிடம் ஆசிர்வாதம் பெறவும் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பாஜக வட்டாரங்கள் கூறியதாவது:

கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்தபோது, பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக, சார்க் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

அந்த விழாவைக் காட்டிலும் மிகப்பெரிய அளவில் பதவியேற்பு விழாவை நடத்த மோடி விரும்புகிறார். குறிப்பாக, இந்திய ஜனநாயகத்தின் வலிமையை உலக நாடுகளுக்கு உணர்த்தும் விதமாக, பதவியேற்பு விழாவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலருக்கு அழைப்பு விடுப்பதற்கு மோடி திட்டமிட்டுள்ளார். இதனால், பதவியேற்பு விழாவை அவசர கதியில் நடத்தி முடிக்க அவர் விரும்பவில்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மக்களவையைக் கலைப்பதற்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை தில்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில், தற்போதைய 16-ஆவது மக்களவையைக் கலைப்பதற்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்தது. இதையடுத்து, மத்திய அமைச்சர்கள் தங்களது ராஜிநாமா கடிதங்களை பிரதமர் மோடியிடம் கூட்டாக அளித்தனர்.

அதைத் தொடர்ந்து,  பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களுடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தையும், அமைச்சர்களின் ராஜிநாமா கடிதங்களையும் அளித்தார். அவர்களின் ராஜிநாமாவை ஏற்றுக் கொண்ட ராம்நாத் கோவிந்த், புதிய அரசு ஆட்சியமைக்கும் வரை பதவியில் தொடருமாறு கேட்டுக் கொண்டார்.

தற்போதைய மக்களவையின் பதவிக்காலம், வரும் ஜூன் 3-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் அடுத்த மக்களவையை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட வேண்டும். மக்களவைக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியலை குடியரசுத் தலைவரிடம் தேர்தல் ஆணையர்கள் விரைவில் அளிப்பார்கள். அதன் பிறகு, அடுத்த மக்களவையை அமைப்பதற்கான பணிகளை குடியரசுத் தலைவர் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(dinamani)