இலங்கை

மோடியை இரண்டுதடவைகள் சந்தித்து மைத்ரியை கடுப்பேற்றிய ரணில் !

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்தபோது அவரை இரண்டு தடவைகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்தமை தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடும் அதிருப்திக்கு ஆளாகியிருப்பதாக அறியமுடிகின்றது.

முன்னதாக பிரதமர் மோடியை வரவேற்க அமைச்சர் சஜித் பிரேமதாஸவையே ஜனாதிபதி நியமித்திருந்தார்.ஆனால் இது தொடர்பில் கட்சி மூத்த உறுப்பினர்களிடம் விசனத்தை வெளியிட்ட பின்னர் பிரதமர் ரணில் நேரடியாக விமான நிலையம் சென்று மோடியை வரவேற்றார்.அத்துடன் விமான நிலையத்தில் இருந்து கொழும்பு வரை இந்தியப் பிரதமருடன் காரில் ஒன்றாக பயணித்தார் ரணில்.

அதேபோல கொழும்பு சந்திப்பு முடிந்த பின்னரும் இந்திய பிரதமருடன் காரில் ஒன்றாக பயணித்திருந்தார் ரணில்.இந்த இரண்டு சந்திப்புக்களின்போதும் இலங்கை அரசியல் தொடர்பான உள்வீட்டு விவகாரங்களை ரணில் ,மோடியிடம் தெரிவித்திருக்கலாமென கருதும் ஜனாதிபதி தரப்பு அது தொடர்பில் ஜனாதிபதியிடம் எத்திவைத்திருக்கிறது.இதனையடுத்தே இது விடயத்தில் மைத்ரி கடும் விசனத்திற்குள்ளாகியுள்ளார்.

ஏற்கனவே தெரிவுக்குழு விவகாரத்தால் பிரதமருக்கும் ஜனாதிபதிக்குமிடையில் ஏற்பட்டுள்ள சர்ச்சை அமைச்சரவை கூட்ட இடைநிறுத்தம் வரை சென்றுள்ளது.இந்நிலையில் மோடி – ரணில் சந்திப்பு அந்த நெருக்கடியை மேலும் தீவிர நிலைக்கு இட்டுச் சென்றுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.