உலகம்

மோடியின் புதிய அமைச்சரவை பதவியேற்பு !

 

இந்திய ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் கோலாகலமாக நடைபெற்ற விழாவில் பிரதமராக மோடி நேற்று மீண்டும் பதவி ஏற்றார். அவருடன் 24 அமைச்சரவை அமைச்சர்களும் , 33 ராஜாங்க அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 303 இடங்களில் அபார வெற்றி பெற்று, மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் பாரதீய ஜனதா மீண்டும் இந்தியாவில் ஆட்சியை பிடித்தது.

மோடி மீண்டும் தேர்வு

இதைத்தொடர்ந்து, அக்கட்சியின் சார்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் டெல்லியில் கடந்த 25-ந் தேதி கூடி, நாடாளுமன்ற பாரதீய ஜனதா குழுவின் தலைவராக (பிரதமர்) நரேந்திர மோடியை மீண்டும் தேர்ந்து எடுத்தனர். இதற்கு பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும் ஒப்புதல் அளித்தன.

இதனால் புதிய அரசு அமைக்குமாறு மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து, மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை 30-ந் தேதி பதவி ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டது.

பிரதமராக பதவி ஏற்றார்

அதன்படி மோடி தலைமையில் 57 மந்திரிகளை கொண்ட புதிய கூட்டணி அமைச்சரவை நேற்று பதவி ஏற்றது.

புதிய அரசு பதவி ஏற்பு விழா டெல்லியில் ஜனாதிபதி மாளிகையின் பிரமாண்ட முற்றத்தில் நேற்று இரவு 7 மணிக்கு கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மோடி இந்தியில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார்

மோடி பதவி ஏற்று முடிந்ததும் அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

57 அமைச்சர்கள்

மோடியை தொடர்ந்து 24 அமைச்சர்மார் , 9 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்கஅமைச்சர்கள் , 24 ராஜாங்க அமைச்சர்கள் என மொத்தம் 57 அமைச்சர்மார் பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கும் ஜனாதிபதி பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோரும் அடங்குவார்கள். இருவரும் அமைச்சரவை அந்தஸ்து அமைச்சர்கள் ஆவார்கள்.

அமைச்சரவையில் இளைஞர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடியுடன் பதவி ஏற்ற பஒருத்திய அமைச்சர்கள் விவரம் வருமாறு:-

அமைச்சர்மார்

1. ராஜ்நாத் சிங்

2. அமித்ஷா

3. நிதின் கட்காரி

4. சதானந்த கவுடா

5. நிர்மலா சீதாராமன்

6. ராம்விலாஸ் பஸ்வான்

7. நரேந்திர சிங் தோமர்

8. ரவிசங்கர் பிரசாத்

9. ஹர்சிம்ரத் கவுர் பாதல்

10. தாவர் சந்த் கெலாட்

11. ஜெய்சங்கர்

12. ரமேஷ் பொக்ரியால்

13. அர்ஜூன் முண்டா

14. ஸ்மிரிதி இரானி

15. ஹர்ஷ வர்தன்

16. பிரகாஷ் ஜவடேகர்

17. பியூஸ் கோயல்

18. தர்மேந்திர பிரதான்

19. முக்தார் அப்பாஸ் நக்வி

20. பிரகலாத் ஜோஷி

21. மகேந்திரநாத் பாண்டே

22. அரவிந்த் சாவந்த்

23. கிரிராஜ் சிங்

24. கஜேந்திர சிங் செகாவத்

ராஜாங்க அமைச்சர்மார் (தனி பொறுப்பு)

1. சந்தோஷ்குமார் கங்குவார்

2. ராவ் இந்திரஜித் சிங்

3. ஸ்ரீபாத யசோ நாயக்

4. டாக்டர் ஜிதேந்திர சிங்

5. கிரண் ரிஜிஜு

6. பிரகலாத் சிங் படேல்

7. ராஜ்குமார் சிங்

8. ஹர்தீப் சிங் பூரி

9. மன்சுக் மாண்டவியா

ராஜாங்க மந்திரிகள்

1. பஹன் சிங் குலாத்தே

2. அஸ்வினி குமார் சவுபே

3. அர்ஜூன் ராம் மேக்வால்

4. வி.கே.சிங்

5. கிரிஷன் பால் குர்ஜார்

6. தாதா ராவ் பட்டீல்

7. கிஷன் ரெட்டி

8. புருசோத்தம் ரூபாலா

9. ராம்தாஸ் அத்வாலே

10. சாத்வி நிரஞ்சன் ஜோதி

11. பாபுல் சுப்ரியோ

12. சஞ்சீவ் பல்யான்

13. சஞ்சய் சம்ராவ் தோட்ரே

14. அனுராக் தாக்குர்

15. சுரேஷ் அங்கடி

16. நித்யானந்த் ராய்

17. ரத்தன்லால் கட்டாரியா

18. முரளதரன்

19. ரேணுகா சிங் சருடா

20. சோம் பர்காஷ்

21. ராமேஷ்வர் டெலி

22. பிரதாப் சந்திர சாரங்கி

23. கைலாஷ் சவுத்ரி

24. தேவஸ்ரீ சவுத்ரி

வெளிநாட்டு தலைவர்கள்

பதவி ஏற்பு விழா முடிந்ததும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடியும், அவரது அமைச்சரவை சகாக்களும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

பதவி ஏற்பு விழாவில் ‘பிம்ஸ்டெக்’ நாடுகள் அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளான இலங்கை ஜனாதிபதி சிறிசேன, வங்காளதேச ஜனாதிபதி முகமது அப்துல் ஹமீது, பூட்டான் பிரதமர் லோட்டே ஷெரிங், நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒளி, மியான்மர் ஜனாதிபதி யூ வின் மையின்ட் ஆகியோரும் மற்றும் கிர்கிஸ்தான் ஜனாதிபதி , ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் அமைப்பின் தலைவருமான குரோன்பே ஜீன்பிகோவ், மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இலங்கை அமைச்சர்கள்

பதவி ஏற்பு விழாவில், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுடன், அமைச்சர்கள் ஆறுமுகன் தொண்டமான், மனோ கணேசன்,ரவூப் ஹக்கீம், ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வெளிநாட்டு தலைவர்களுடனும் மோடி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்

பங்கேற்ற பிரபலங்கள்

விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி, முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பட்டீல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி, பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால், சமாஜ்வாடி நிறுவனர் முலாயம் சிங் யாதவ், நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முன்னாள் மத்திய மந்திரிகள், உயர் அதிகாரிகள், வெளிநாட்டு தூதர்கள், நீதிபதிகள், தொழில் அதிபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பதவி ஏற்பு விழா 2 மணி நேரம் நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த பதவி ஏற்பு விழாவில் சுமார் 8 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

பலத்த பாதுகாப்பு

விழா முடிந்ததும் பங்கேற்ற விருந்தினர்களுக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.

பதவி ஏற்பு விழாவையொட்டி, ஜனாதிபதி மாளிகை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.