இலங்கை

Exclusive ! மைத்ரியை தூக்க யூ.என்.பி இரகசிய திட்டம் – விடயத்தை அறிந்து வெகுண்டெழுந்தார் சிறிசேன !

ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்கும் இம்பீச்மென்ட் எனப்படும் குற்றவியல் பிரேரணையை பாராளுமன்றத்தில் கொண்டுவரும் இரகசிய நகர்வை மேற்கொண்டிருக்கிறது ஐக்கிய தேசியக் கட்சி .

ஐக்கிய தேசியக் கட்சி பின்வரிசை எம் பிக்களின் இது தொடர்பிலான இரண்டு சுற்று பேச்சு ஏற்கனவே நடந்துள்ளது.

அடுத்தடுத்த மாதங்களில் அதிரடியான சர்ச்சைக்குரிய முடிவுகளை ஜனாதிபதி மைத்ரி எடுக்கலாமென கருதப்படுவதால் இப்படியான நகர்வை இரகசியமாக மேற்கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை எம் பிக்கள் , ஏற்கனவே வரவு செலவு திட்ட இறுதி வாக்களிப்பு விவகாரத்தில் மைத்ரியுடன் அதிருப்தியுடன் இருக்கும் கூட்டு எதிர்க்கட்சி எம் பிக்களின் ஆதரவைப் பெறவும் முயற்சிகளை எடுத்து வருவதாக அறியமுடிகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த இரகசிய காய்நகர்த்தல்கள் குறித்து அறிந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடும் சினத்துடன் இருப்பதாக சொல்லப்படுகிறது.

பிரதமர் ரணில் இந்த நடவடிக்கையின் பின்னால் இருப்பதாக கருதும் ஜனாதிபதி இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சில செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

வெற்றிடமாகவுள்ள பிரதம நீதியரசர் மற்றும் கணக்காளர் நாயகம் ஆகிய பதவிகளுக்கு புதியவர்களை நியமித்து அதனூடாக சில காய்நகர்த்தல்களை மைத்ரி முன்னெடுக்கலாமென கருதும் ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு ஒரு அழுத்தத்தை வழங்கவே இந்த நடவடிக்கையை திரைமறைவில் மேற்கொண்டுள்ளதாக அறியமுடிந்தது.

இது தொடர்பில் முன்னறிவித்தல் ஒன்றை சபாநாயகருக்கு வழங்கவுள்ள ஐக்கிய தேசியக் கட்சி எம் பிக்கள் திடீரென வெளிவரும் செய்தி ஒன்றுக்காக தயார் நிலையில் இருக்குமாறு கொழும்பில் உள்ள முக்கிய ஊடக நிறுவனங்களையும் கேட்டுள்ளதாக தகவல்.