இலங்கை

மைத்ரியை எதிர்க்கத் தயாராகிறார் பூஜித்த ! – முக்கிய தகவல்களை கட்சித் தலைவர்கள் சிலரிடம் சொன்னார் – நீதிமன்றம் செல்லவும் தயார் !

தாக்குதல் சம்பவங்கள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணைக்குழுவின் அறிக்கையை வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஏதேனும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் முக்கியத்துவம்மிக்க பல விடயங்களை வெளியிட தீர்மானித்துள்ளார் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர.

தேவைப்படின் அவர் நீதிமன்றம் செல்வதற்கும் தயாராகி இருப்பதாக தகவல்கள் சொல்கின்றன.

விசாரணைக்குழு , பொலிஸ் மா அதிபரிடமும் -முன்னாள் பாதுகாப்பு செயலரிடமும் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளது.வரும் 6 ஆம் திகதி அந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும்.

பொலிஸ் மா அதிபர் தயார் !

சேவையில் இருந்து தம்மை கட்டாய லீவில் அனுப்பியதால் ஜனாதிபதி மீது கடுப்பில் இருக்கும் பூஜித்த , அதற்கு பதிலடி கொடுக்க தீர்மானித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக – பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் தாம் மேற்கொண்ட முன்னேற்பாடுகளை விளக்கி அறிக்கைகள் கொண்ட கோவைகளை பூஜித்த நேற்று முக்கியமான கட்சித் தலைவர்களுக்கு வழங்கியுள்ளார்.

அதேபோல் தம்மை பதவியில் இருந்து முற்றாக நீக்க நடவடிக்கை எடுக்கப்படுமாயின் நீதிமன்றம் செல்லவும் தயாராகியுள்ள அவர் , பகிரங்க அறிவிப்பொன்றை செய்யவும் உத்தேசித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலைமை கொழும்பில் மீண்டும் அரசியல் நெருக்கடியொன்றை ஏற்படுத்தலாமென அரசியல் வட்டாரங்கள் சொல்கின்றன.

இதேபோல் பாதுகாப்பு செயலராக பணிபுரிந்த ஹேமசிறியும் , தம்மீது குற்றச்சாட்டுக்கள் வந்தால் பதிலளிக்க தயாராகி இருப்பதாக அறியமுடிகின்றது.

தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டங்களுக்கு அரசியல்வாதிகளான திலங்க சுமதிபால, பைசர் முஸ்தபா, தயாசிறி ஜயசேகர ஆகியோர் அழைக்கப்பட்ட விடயங்கள் உட்பட்ட பல விடயங்களை ஹேமசிறி வெளிப்படுத்த தயாராக இருப்பதாக மேலும் அறியமுடிந்தது.