இலங்கை

முஸ்லிம் அரசியல்வாதிகள் சஹ்ரானுடன் உடன்படிக்கை – அசாத் சாலி பரபரப்பு சாட்சியம் !

 

” தேசிய தௌஹித் ஜமாத்தின் தலைவர் மொஹமட் சஹ்ரான் , தனது அதிகாரத்தை பயன்படுத்தி, கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலுள்ள மக்களை அச்சுறுத்தி வந்தார். அதனால் சஹ்ரானின் பேச்சுக்களுக்கு அந்தப்பகுதி மக்கள் செவிமடுத்து வந்தனர் . 2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிற்கு, தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் நிபந்தனைகளுடனான உடன்படிக்கையின் பிரகாரம் உதவிகளை வழங்கினார்” .

இவ்வாறு மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்தார் .

ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளித்த போதே, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது ,

2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் காலப் பகுதிகளில் தன்னுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் அரசியல் கட்சிகளுக்கே தாம் உதவிகளை வழங்குவதாக தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் முன்னர் தெரிவித்திருந்தார் .கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் மொஹமட் சஹ்ரான் , மக்களை அச்சுறுத்தி தனது ஆளுகைக்குள் அவர்களை வைத்திருந்தார்.

தன்னுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு மாத்திரமே, தேர்தல் காலப் பகுதியில் தான் உதவிகளை வழங்குவதாக அவர் கூறி வந்த பின்னணியிலேயே, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, மொஹமட் சஹாரானுடன் உடன்படிக்கையொன்றை ஏற்படுத்திக் கொண்டார் .

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மாத்திரமன்றி, மேலும் பல முஸ்லிம் அரசியல்வாதிகளும் மொஹமட் சஹாரானுடன் உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டிருந்தனர்.தமது தேர்தல் பிரசாரங்களின் போது, பட்டாசுகளை கொளுத்த கூடாது, பாடல்கள் ஒலிபரப்பப்பட கூடாது உள்ளிட்ட சில விடயங்கள் அந்த உடன்படிக்கையில் காணப்பட்டன .

இதேவேளை, பெட்டிக்லோ கெம்பஸ் நிறுவனத்திற்கான நிதியுதவி சவூதி அரேபியாவின் ஊடாக கிடைத்தமையை நான் அறிவேன்.இந்த பல்கலைக்கழகம் முழுமையான ஷரியா கற்கை நெறியை கற்பிக்கும் பல்கலைக்கழகம் கிடையாது .அந்த பல்கலைக்கழகத்தில் ஒரு பாடநெறி மாத்திரமே ஷரியா. முஸ்லிம்களின் பாரம்பரிய சட்டமான ஷரியா சட்டம், முஸ்லிம்களுக்கு அத்தியாவசியமானது.

பள்ளிவாசல்களை நிர்வகித்தல், முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் உள்ளிட்டவையே ஷரியா சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது .அந்த சட்டத்தில் எந்தவித பிழையான விடயங்களும் கிடையாது .
அப்துல் ராசிக் என்ற நபர் கைதுசெய்யப்படாது வெளியில் நடமாடுகின்றமையானது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது .

அப்துல் ராசிக் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மூன்று தடவைகள் கூறினேன் . ஒரு சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி, குற்றப்புலனாய்வு பிரிவினர் பொறுப்பதிகாரியுடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடினார் அப்துல் ராசிக், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொள்கைகளை பின்பற்றி வருகிறார். அதனூடாக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்படுகிறது.

ஆடைகள் குறித்து அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்தின் ஊடாக முஸ்லிம்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்., இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி முஸ்லிம்களுக்கு நியாயத்தை பெற்றுத்தர இந்த தெரிவுக்குழு முன்வரவேண்டும்.

– என்றும் இங்கு குறிப்பிட்டார் அசாத் சாலி