இலங்கை

முஸ்லிம் அமைச்சர்களை தக்கவைக்க ஐ.தேக தீவிரம் – சமூகமே முக்கியமென வெளியேறுகின்றனர் அரசியல்வாதிகள் !

ஆளுநர்மார் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதால் அமைச்சுப் பதவிகளை உடனடியாக இராஜினாமா செய்யவேண்டியதில்லை என பிரதமர் ரணில் மற்றும் அரசின் சிரேஷ்ட அமைச்சர்கள் விடுத்த கோரிக்கையினை முஸ்லிம் அமைச்சர்களும் அரசியல் பிரமுகர்களும் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டனர்.

சமூகமே ஒருவித அச்சத்தில் உள்ள ஒரு சூழ்நிலையில் பதவிகள் தேவையில்லையென முஸ்லிம் அரசியல்வாதிகள் கூறியுள்ள அதேசமயம் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு தருவதாக கூறிய அரசு அவசரகால மற்றும் ஊரடங்கு நேரத்திலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தவிட்டு பார்த்துக் கொண்டிருந்ததாக சாடியுள்ளனர்.

இதனால் அமைச்சுப் பதவிகளில் விலகி  சுயாதீன குழுவாக பின்வரிசையில் இருந்து செயற்படவும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தீர்மானித்துள்ளனர். அமைச்சர்களான கபீர் ஹாசிம், ஹலீம் ஆகியோரும் பதவிகளில் இருந்து விலகவுள்ளதாக தெரிகிறது.

இன்னும் சற்று நேரத்தில் பிரதமருடன் மீண்டும் ஒரு சந்திப்பை நடத்தவுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் அதன் பின்னர் முடிவை அறிவிக்கவுள்ளனர்.அமைச்சர்கள் ஹக்கீம் , ரிசார்ட் ஆகியோர் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதிக்கு அனுப்பவுள்ளனர். பிரதமருக்கு விசேட கடிதம் ஒன்றை கையளிக்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.