இலங்கை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு – விசேட கலந்துரையாடல்!

– வன்னி செய்தியாளர் –

முள்ளிவாய்க்கால் பேரவலம் இடம்பெற்று 10 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் படு கொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளை நினைவுகூருமுகமாக வருடம் தோறும் மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இடம்பெறுகின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இம்முறையும் சிறப்பாக இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வு தொடர்பாக ஏற்கனவே முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அந்த நினைவு நிகழ்வை மேற்கொள்வதற்காக ஒரு நினைவேந்தல் குழு அமைக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து கரைதுறைப்பற்று பிரதேச சபை அமர்வில் இந்த நினைவேந்தல் நிகழ்வினை கரைதுறைப்பற்று பிரதேச சபை செய்யவேண்டும் என்ற ஒரு நிலைப்பாடு உருவாக்கப்பட்டது இதனை தொடர்ந்து சில உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவினை அழைத்து பிரதேச சபை மண்டபத்தில் வைத்து கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவுக்கும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (3) கரைதுறைப்பற்று பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது. பிரதேச சபையின் உப தவிசாளர் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.

இந்த கலந்துரையாடலை தொடர்ந்து நினைவேந்தல் தொடர்பில் பிரதேசசபையின் உப தவிசாளர் , ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது கடந்த சபை அமர்விலேயே இவ்வாறான ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அதன் அடிப்படையிலேயே இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவோடு கலந்துரையாடி இருப்பதாகவும் அவர்களது கோரிக்கைகளை ஏற்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு இந்த நிகழ்வை செய்யும் எனவும் அதற்கான பூரண ஒத்துழைப்பை எங்களுடைய பிரதேசசபை மேற்கொள்ளும் என்ற தீர்மானத்திற்கு வருகை தந்திருப்பதாக தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பாக கருத்து தெரிவித்த அருட்தந்தை லூஜி ஆம்ஸ்ட்ராங் , முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு இம்மாதம் 18ஆம் நாள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறுகின்ற மைதானத்தில் நடாத்துவதற்கான பல்வேறு விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் இன்று முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளருடைய அழைப்பின் பெயரில் இந்த குழுவினுடைய அங்கத்தவர்கள் உபதவிசாளர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துரையாடி இந்த நிகழ்வை 8 மாவட்டங்களில் பிரதிநிதிகளோடு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் குழு இதனை முன்னின்று நடாத்துவதற்கு பிரதேச சபை தவிசாளர் உறுப்பினர்கள் தங்களுடைய முழு ஒத்துழைப்பை எங்களுக்கு வழங்குவதாக தெரிவித்திருக்கிறார்கள்.

எனவே இந்த நிகழ்வை எதிர்வரும் 18ஆம் நாள் மிகவும் உணர்வு பூர்வமாக மன உருக்கத்தோடு இந்த தினத்தை நாங்கள் நினைவு கூர இருக்கிறோம் அந்த நிகழ்வில் அனைத்து மக்களையும் பங்கு பற்ற வருமாறு அன்போடு அழைக்கின்றோம் இது பற்றிய கலந்துரையாடல்களை பாதுகாப்பு பிரிவு போலீஸ் பிரிவினரோடு கலந்துரையாடிய வண்ணம் இருக்கின்றோம் ஒரு சுமுகமான பாதுகாப்போடு இந்த நிகழ்வை நாங்கள் முன்னெடுக்க முழு முயற்சிகளை மேற்கொண்ட வண்ணமாக இருக்கின்றோம் எமது எட்டு மாவட்ட பிரதிநிதிகளின் ஒத்துழைப்போடு எமது கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உடைய அனைத்து வசதிகளோடும் இந்த நிகழ்வை நாங்கள் முன்னெடுக்க முயற்சி எடுக்கிறோம் என்பதனை அனைவருக்கும் அறியத் தருகின்றோம் என்றார்.