Breaking News

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை – பல கிராமங்கள் நீரில் மூழ்கின!! வெள்ளப்பெருக்கால் மக்கள் இடம்பெயர்வு!

 

-வன்னி செய்தியாளர் –

முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று (5)இரவு முதல் இன்று அதிகாலை வரை பெய்த கனமழை காரணமாக கிராமங்கள் மற்றும் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன . இதன் காரணமாக பல கிராமங்களை சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் பண்டாரவன்னியன் கிராமம் பேராறு முத்தையன்கட்டு போன்ற கிராமங்களும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் இருட்டுமடு சுதந்திரபுரம் உடையார்கட்டு வள்ளிபுனம் தேவிபுரம் தேராவில் மூங்கிலாறு மன்னா கண்டல் போன்ற கிராமங்களும் இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன அத்தோடு துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் பல கிராமங்களும் வெளியே செயலர் பிரிவில் பல கிராமங்களும் நீரினால் மூழ்கியுள்ளன இந்த வெள்ள அனர்த்தத்தின் காரணமாக இந்த கிராமங்களில் இருந்த மக்கள் பொது இடங்களிலும் பாடசாலைகளிலும் இடம்பெயர்ந்து தங்கியுள்ளனர் இடம்பெயர்ந்தவர்களுக்கான சமைத்த உணவுகளை அந்தந்த பிரதேச செயலர் பிரிவு பிரதேச செயலகங்களால் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் மீட்புப் பணிகளில் இராணுவம் மற்றும் பொலிஸார் மற்றும் பிரதேச இளைஞர்கள் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக உயிர் சேதங்கள் எவையும் இடம் பெற்றிருந்த போதிலும் மிகப் பாரிய சொத்து அழிவுகள் ஏற்பட்டுள்ளன. விவசாய நிலங்கள் கால்நடைகள் என்பனவும் இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக அழிவடைந்துள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகப் பெரும் குளங்களான தண்ணிமுறிப்பு மற்றும் முத்தையன்கட்டு என்பனவற்றின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக முல்லைத்தீவு பரந்தன் A35 பிரதான பாதையில் பல இடங்களில் வீதியின் குறுக்கே வெள்ளம் பாய்வதால் போக்குவரத்தும் தடைபட்டுள்ளது . இந்த வீதியில் சுதந்திர புரம் பகுதியில் பாலம் ஒன்று உடைபெடுத்துள்ளதால் போக்குவரத்து தடை ஏற்ப்பட்டுள்ளது.