உலகம்

மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடேன் – பதவியை இராஜினாமா செய்து அல்ஜீரிய ஜனாதிபதி அறிவிப்பு

அல்ஜீரியா ஜனாதிபதி அப்தேல்அசிஸ் பவுட்பிலிகா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளதுடன் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென்றும் தெரிவித்துள்ளார். இந்த இராஜினாமா உடனடியாக அமுலுக்கு வரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆபிரிக்காவின் வட பகுதியில் அமைந்துள்ள அல்ஜீரியாவில் 4-வது முறையாக பதவியில் இருக்கும் ஜனாதிபதி அப்தேல்அசிஸ் 5-வது முறையாக மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட திட்டமிட்டார். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.

அல்ஜீரியாவில் மாற்றம் வேண்டும் என வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால் மீண்டும் போட்டியிடும் திட்டத்தை மீளப்பெற்ற ஜனாதிபதி அப்தேல்அசிஸ், வருகிற 18-ந் தேதி நடைபெற வேண்டிய தேர்தலை தள்ளிவைத்தார். எனினும் போராட்டங்கள் தீவிரமடைந்தன.

இதைத்தொடர்ந்து அல்ஜீரிய இராணுவ தளபதி அகமது கெய்த் சலா, சமீபத்தில் ஜனாதிபதியை சந்தித்து அரசியல் சாசனத்தின் 102-வது பிரிவை அமல்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். உடல் நலக்குறைவு காரணமாக நாட்டில் ஜனாதிபதி பதவி காலியாக இருப்பதாக அறிவிக்கவும், நாட்டை நிர்வகிக்க அரசியல்சாசன குழு ஒன்றை அமைக்கவும் இந்த பிரிவு வழி வகுக்கிறது. அந்த அடிப்படையில் ஜனாதிபதி ஜனாதிபதி அப்தேல்அசிஸ் புதிய அமைச்சரவையை அமைத்தார். இதன் தொடர்ச்சியாக ஜனாதிபதி பதவியில் இருந்து ஜனாதிபதி அப்தேல்அசிஸ் இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி அப்தேல்அசிஸ் பதவி விலகுவதாக அறிவித்ததும், ஏராளமான பொதுமக்கள் அதை கொண்டாடும் வகையில், காரில் ஹோர்ன் ஒலிகளை எழுப்பினர்.

அல்ஜீரிய அரசியலமைப்பின்படி , ஜனாதிபதி பதவி விலகிவிட்டால், பாராளுமன்ற மேலவையின் சபாநாயகர் 90 நாட்கள் இடைக்கால தலைவராக இருப்பார். இந்த 90 நாட்களுக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.