இலங்கை

மீண்டும் உயர்நீதிமன்றத்தில் பதவிக்காலத்தை வினவுவது அறிவிலித்தனமானது – சுமந்திரன் எம்.பி

பதவிக்காலம் குறித்து மீண்டும் உயர்நீதிமன்றத்திடம் ஜனாதிபதி தரப்பு அபிப்பிராயம் கேட்க முயலுமாயின்அது சுத்த பைத்தியக்காரத்தனமான நடவடிக்கையாகவே இருக்குமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் , பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பதவிக்காலம் எப்போது முடிவடையும் எனபதை உயர்நீதிமன்றத்திடம் வினவ ஜனாதிபதி தரப்பு முஸ்தீபுகளை எடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்திருப்பது குறித்து “ தமிழன் ” செய்திச் சேவை சுமந்திரனிடம் வினவியது. அப்போதே இப்படி குறிப்பிட்ட அவர் மேலும் கூறியதாவது,

ஏற்கனவே உயர்நீதிமன்றத்திடம் இதுபற்றி ஜனாதிபதி வினவினார். அதற்கு உரிய பதிலை உயர்நீதிமன்றம் வழங்கி விட்டது. அதன்படி தேர்தல் ஆணைக்குழு உரிய நேரத்தில் தேர்தலை அறிவிக்கும்.

அப்படியான நிலையில் மீண்டும் உயர்நீதிமன்றத்திடம் அபிப்பிராயம் கேட்பதென்பது அறிவிலித்தனமானது. முன்னர் சொன்னதை மீண்டும் கேட்க வேண்டுமா? 2015 ஜனவரி 9 ஆம் திகதி அவரது பதவிக்காலம் ஆரம்பிக்கிறது. ஆறு வருடத்திற்கு தெரிவான மைத்ரிபால சிறிசேனவின் பதவிக்காலம் மட்டுப்படுத்தப்பட்டு ஐந்து வருடமாக குறைக்கப்பட்டுள்ளது.

இது அடுத்த ஜனாதிபதிக்கா என்ற கேள்விக்கே இடமில்லை. என்னைப் பொறுத்தவரை மீண்டும் உயர்நீதிமன்றத்திடம் சென்று மூக்குடைபடும் செயற்பாடாகவே இது இருக்கப் போகிறது..

என்றும் குறிப்பிட்டார் சுமந்திரன் எம். பி