Breaking News

மஹேலவிடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்யப்படமாட்டாது

2011 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு மஹேல ஜயவர்தனவை​ இன்றைய தினம் (03) சமூகமளிக்க வேண்டாம் என விளையாட்டுத் துறை அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவு அறிவித்துள்ளது.

மேலும் விசேட விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு வேறு திகதி அறிவிக்கப்படும் எனவும் அந்த பிரிவி குறிப்பிட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவில் இன்றைய தினம் முன்னிலையாகுமாறு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தனவிற்கு நேற்றைய தினம் (02) அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த விசாரணைப் பிரிவு தற்போது மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் இதுவரை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா, இலங்கை அணி வீரர் உபுல் தரங்க மற்றும் குமார் சங்கக்காரவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக ஐக்கிய இளைஞர் அமைப்பின் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.