Breaking News

மீண்டும் ஏணியில் ஏறினார் இராஜேந்திரன் – கூலிப்படையுடன் சேர்ந்தது தவறு என்கிறார் !

 

” தமிழர் செறிவாக வாழும் வடக்கு, கிழக்கு, மலையக மாவட்டங்களில் தமிழ் பிரதிநிதித்துவத்திற்கான அபாயம் இல்லை. அங்கே பல தமிழ் எம்பீக்களை தெரிவு செய்யும் அளவிற்கு தமிழர் ஜனத்தொகை இருக்கிறது. ஆனால், கொழும்பு மாவட்டத்தில் அந்த நிலைமை கிடையாது. இங்கே ஒப்பீட்டளவில் தமிழர் ஜனத்தொகை குறைவு. எனவே இங்கே “கரணம் தப்பினால் மரணம் நிச்சயம்”. இந்நிலையில் தலைநகர தமிழர் பிரதிநிதித்துவத்தை ஒழிக்க தனிப்பட்ட முரண்பாடுகளை முன்வைத்து திட்டமிடும் தனி நபர்களுடன் இணைந்து செயற்பட இனியும் நான் தயாராக இல்லை. தமிழ் மக்கள் இணையம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுவினர், தலைநகர தமிழர் பிரதிநிதித்துவத்தை அழிக்கும் ஒரேயொரு நோக்கில் கூலிப்படையினராகவே செயற்பட்டனர். இதன் காரணமாக தலைவர் மனோ கணேசன் அவர்களின் தலைமையை ஏற்றுக்கொண்டு, எனது தாய் கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணிக்கு திரும்பி வர நான் முடிவு செய்துள்ளேன்..”

என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எஸ். ராஜேந்திரன் தெரிவித்தார்,

சமீபத்தில் ஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து பிரிந்து சென்ற முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எஸ். ராஜேந்திரன், இன்று அமைச்சர் மனோ கணேசனை சந்தித்து, ஜனநாயக மக்கள் முன்னணியில் மீண்டும் இணைந்துகொண்டார். இந்த நிகழ்வில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிரகாஷ் கணேசன், அமைப்பு செயலாளர் ஜனகன் வினாநாயகமூர்த்தி, மாநகரசபை உறுப்பினர் சுதர்ஷன், மத்தியக்குழு உறுப்பினர் ஆனந்த குமார் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இதையடுத்து நடைபெற்ற ஊடக மாநாட்டில் எஸ். ராஜேந்திரன் மேலும் கூறியதாவது,

எமது தலைவர் அமைச்சர் மனோ கணேசன் தன்னைவிட சிறந்த ஒரு தலைமையை கொழும்பில் உருவாக்க முடியுமானால், அதை செய்யுங்கள் என எப்போது பெருந்தன்மையாக எம்மிடம் கூறுவார். இந்நிலையிலேயே எனக்கு ஏற்பட்ட ஒருசில தவறான புரிதல் காரணமாகவும், தவறான வழிக்காட்டல்கள் காரணமாகவும் நான் எனது கட்சியில் இருந்து வெளியேற நேர்ந்தது. ஆனால், இன்று என்னை எமது கட்சியில் இருந்து வெளியேறும்படி வலியுறுத்தியவர்களின் உண்மை நோக்கம், ஒட்டு மொத்த தமிழினத்திற்கு எதிரானது என்பதை நான் அங்கு சென்ற ஒரு சில நாட்களிலேயே அறிந்துக்கொண்டேன். அதனாலேயே நான் கடந்த சில வாரங்களாக ஒதுங்கி இருந்தேன்.

நான் சென்ற சேர்ந்துக்கொண்ட மாகாணசபை உறுப்பினர் சண். குகவரதன் தலைமையில் அமைக்கப்பட்ட தமிழ் மக்கள் இணையம் என்ற குழுவில், தலைவர் மனோ கணேசனை கொழும்பில் இருந்து ஒழிக்கும் ஒரே நோக்கில் மாத்திரம் இரகசிய சதித்திட்டங்கள் தீட்டப்படுவதை அறிந்து நான் அதிர்ச்சியுற்றேன். இலங்கை வாழ் ஒட்டுமொத்த தமிழினத்துக்கு எதிரான நிலைப்பாடுகளை கொண்டுள்ள பேரினவாத மகிந்த ராஜபக்ச அணியை சேர்ந்த நபர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தைகள் நடப்பதையும், இந்த நல்லாட்சி அரசாங்கத்தையே தோற்கடிக்கவும், கொழும்பில் தமிழர்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டும் வைத்திருக்கவும், பேரினவாதிகளுடன் கூட்டு சதித்திட்டத்தை, இந்த சதிகார கும்பல் தீட்டுவதையும் என் மனசாட்சியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஜனநாயக மக்கள் முன்னணியில் இருந்து வெளியேற்றப்பட்ட மாகாணசபை உறுப்பினர் சண். குகவரதன், தமக்கு என சொந்தக்கொள்கைகள் எதுவும் இல்லாமல் வேறு பல அரசியல்வாதிகளை நாடி சென்று தலைவர் மனோ கணேசனை அழிக்க உதவி செய்ய முடியமா என கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தார். முதலில் இவர்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்து உதவி கேட்டனர். நல்லாட்சி அரசின் ஒரே கூட்டணி அரசில் நாம் இருவரும் இருக்கின்றோம். எனவே அமைச்சர் மனோவுக்கு எதிராக உங்களுக்கு உதவ முடியாது என அமைச்சர் ரவி கருணாநாயக்க மறுத்து விட்டார். இந்த முயற்சி முடியாமல் போகவே, முன்னாள் பிரதி அமைச்சரும், தேசிய பட்டியல் எம்பீயுமான பெ. இராதாகிருஷ்ணனை சந்தித்து ஒத்துழைப்பு கேட்டனர். அவரும் இதில் பெரிதும் அக்கறை காட்டவில்லை. இந்நிலையில், மாகாணசபை உறுப்பினர் சண். குகவரதன் தலைமையிலான இந்த கூலிப்படையினர், எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுன அணியினருடன் தொடர்புகளை ஏற்படுத்த கடும் முயற்சிகளை மேற்கொண்டனர். முன்னாள் பிரதி அமைச்சர் ஒருவரது உதவியின் மூலம் மகிந்த அணியின் சில கீழ்மட்ட உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. எனினும், கடந்த வருட இறுதியில் நடைபெற்ற அரசியலமைப்பு சதி முயற்சியின் போது, உறுதியளித்தப்படி, அமைச்சர் மனோ கணேசன் அவர்களை தம்முடன் கொண்டு வந்த சேர்க்க தவறியதால், பொதுஜன பெரமுன அணியினர், மாகாணசபை உறுப்பினர் சண். குகவரதன் குழுவினரை சந்திக்க விரும்பவில்லை என நான் அறிந்துக்கொண்டேன்.

இந்நிலையில் இத்தகைய சொந்த கொள்கைகள் இல்லாமல், தம் சொந்த இனத்தையே காட்டிக்கொடுக்கும் எண்ணம் கொண்டு, அமைச்சர் மனோ கணேசனை அழிப்பது என்ற ஒரேயொரு இலக்குடன் செயற்படும் இந்த கூலிப்படை குழுவில் இனியும் இருக்க முடியாது என நானும், எனது ஆதரவாளர்களும் முடிவு செய்தோம். இதன் பிறகு பழைய கசப்புகளை மறந்துவிட்டு, தலைவர் மனோ கணேசன், தேசிய அமைப்பாளர் பிரகாஷ் கணேசன் மற்றும் கட்சியின் ஏனைய அரசியல் குழு உறுப்பினர்களுடன் மனம் விட்டு கலந்துரையாடிய பின் எனது தாய் கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணிக்கு நானும், எனது ஆதரவாளர்களும் ஒருமித்து முடிவுடன் மீண்டும் திரும்பி வந்துள்ளோம். இனி எமது எதிர்காலம் ஜனநாயக மக்கள் முன்னணியுடனேயே தலைவர் மனோ கணேசன் தலைமையில் தொடரும்.

இவ்வாறு ராஜேந்திரன் தெரித்துள்ளார்