Breaking News

மதஸ்தானங்களில் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டால் வாக்குகள் இரத்து செய்யப்படும்

சமய வழிப்பாட்டுத் தளங்களில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பது தேர்தல் சட்டங்களுக்கு அமைய முற்றிலும் தவறு என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்:

தற்போது சமய வழிப்பாட்டுத் தளங்களில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் பெருமளவில் முன்னெடுக்கப்படுகின்றன. இது தேர்தல் சட்டங்களுக்கு முற்றிலும் முரணானது.

1981ஆம் ஆண்டு முதலாம் பிரிவு தேர்தல் சட்டத்திற்கமைய இது தவறானதாகும். ஆகவே குறித்த வேட்பாளர்கள் வெற்றிப்பெற்றாலும் அவர்களின் வாக்குகள் இரத்து செய்யப்படும் என கடுமையாக எச்சரிக்கின்றோம்.

இதேவேளை முன்னாள் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சிலர் தற்போது அரச வாகனங்களை பயன்படுத்துகின்றனர் என அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் வேட்பாளர்களே அது குறித்து முறையிடுகின்றனர். அதேபோல் அமைச்சரவையில் உள்ள சிலரும் இவ்வாறு அரச வாகனங்களை பயன்படுத்துவதாக முறைப்பாடுகள் கிடைக்கின்றன.

ஆகவே அரச வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம். அது பாரிய தேர்தல் விதி மீறளாகும். தற்போது தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

எந்த அடிப்படை காரணங்களும் இன்றி இவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. சந்தேகங்கள் இருந்தால் ஆணைக்குழுவில் முன்வைக்க முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.