இலங்கை

மட்டு .ஆரையம்பதி முஸ்லிம் வர்த்தக நிலையங்களை தற்காலிகமாக மூட உத்தரவு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை பிரதேச சபைக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களின் வியாபார நிலையங்களை மூடுமாறு பிரதேச சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரதேச பிரதேச சபையின் 14ஆவது அமர்வு கடந்த புதன்கிழமை (15) பிரதேச சபைத் தவிசாளர் சோ.மகேந்திரலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் பொன்.குணசேகரனினால் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரையில் ஆரையம்பதி பிரதேசத்தில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் முஸ்லிம் வர்த்தகர்களின் வர்த்தக நிலையங்களைத் தற்காலிகமாகத் தடை செய்வதற்கான பிரேரணையை சமர்ப்பித்தார்.

17 உறுப்பினர்களைக் கொண்ட இந்த பிரதேச சபையில் குறித்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட போது சபையிலுள்ள ஐந்து முஸ்லிம் உறுப்பினர்களும் கூட்டாக அதிருப்தி வெளியிட்டதுடன், சபை அமர்விலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.

எனினும் இந்த பிரேரணைக்கு ஏனைய அனைத்து உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

இதனையடுத்து, நாட்டில் தற்போது நிலவும் அசாதாரன சூழ்நிலைமை காரணமாக மண்முனை பிரதேச சபைக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள முஸ்லிம் வியாபாரிகளின் வியாபார நிலையங்களை தற்காலிகமாக தடை செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குறித்த பிரதேச சபைக்குட்பட்ட ஐந்து சதவீத பரப்பளவில் 30 சதவீதமான முஸ்லிம் மக்கள் – மன்முனை, காங்கயனொடை, ஒல்லிக்குளம், பாலமுனை உள்ளிட்ட பல கிராமங்களில் வாழ்ந்து வருகின்றர்.

இந்த நிலையில் ஆரையம்பதி பிரதேசத்தில் கோயில் மற்றும் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் 40 முதல் 45 வரையான முஸ்லிம்கள் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தீர்மானம் தொடர்பிலான அறிவிப்பு நேற்று (16) வியாழக்கிழமை முஸ்லிம் வியாபாரிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ள கடை உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, முஸ்லிம் வியாபாரிகளை குறித்த கடைகளிலிருந்து ஏழு நாட்களுக்குள் வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து எமது செய்திச் சேவையிடம் கருத்து தெரிவித்த பிரதேச சபைத் தலைவர் , முஸ்லிம் வர்த்தகர்கள் வெளியிடங்களில் இருந்து வந்து வாடகைக்கு எடுத்துள்ளதாகவும் அவை தொடர்பில் ஆராயப்படும் வரை தற்காலிகமாக இந்த தடை இருக்குமென தெரிவித்தார். அதேபோல் இப்போதுள்ள சூழ்நிலையில் முஸ்லிம் வர்த்தகர்கள் தமிழ் பிரதேசங்களுக்கு வரும்போது பாதுகாப்பு அச்சம் இருப்பதால் அதுவும் கவனத்திற் கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த தீர்மானம் நிறைவேறியதன் பின்னர் இது தொடர்பில் பொலிஸார் தம்மிடம் விசாரணைகளை நடத்தி வருவதாக பிரதேச சபைத் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.