இலங்கை

மட்டக்களப்பில் பதற்றம் – குண்டுதாரியின் உடற்பாகங்களை புதைத்ததில் சர்ச்சை !

 

மட்டக்களப்பு – கல்வியங்காடு இந்து மயானத்தில் ஈஸ்டர் குண்டுதாரி ஒருவரின் உடற்பாங்கள் புதைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த பகுதி மக்கள் தற்போது ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பகுதியில் தற்போது அமைதியின்மை நிலவி வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த பெருந்திரளான இளைஞர்கள் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை தமது பிரதேசத்தில் புதைக்க வேண்டாம் என தாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறிய போதிலும், அதனை பொருட்படுத்தாது பொலிஸார் அந்த உடற்பாகங்களை நேற்று இந்து மயானத்தில் புதைத்துள்ளதாகவும் பிரதேச மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.

கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியை மறித்துள்ள போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையினால், குறித்த பகுதியில் தற்போது போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சற்றுமுன்னர் கிடைத்த தகவல்:− கல்லடி பாலத்திற்கு அருகில் தற்போது கண்ணீர் புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது