உலகம்

மக்காவை நோக்கி பாய்ந்த இரண்டு ஏவுகணைகளை சவுதி அரேபிய இராணுவம் தாக்கியழித்தது

இஸ்லாமியர்களின் புனித நகரான மக்காவை நோக்கி பாய்ந்த இரண்டு ஏவுகணைகளை, சவுதி அரேபிய ராணுவம் தகர்த்துள்ளது. ஆனாலும், அடுத்தடுத்து தாக்குதல் நிகழ்த்தப்படலாம் என்பதால், அங்கு உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது.

ஏமனிலுள்ள ஹவுத்திப் புரட்சியாளர்களுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையே கடுமையான உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில், ஏமன் அதிபர் மன்சூர் ஹதிக்கு ஆதரவாக சவுதி அரேபியப் படைகள் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஹவுத்திப் புரட்சியாளர்களுக்கு எதிராகப் போர் புரிந்து வருகின்றன.

ஹவுத்திப் புரட்சியாளர்களில் பெரும்பாலானோர் ஷியா முஸ்லிம்கள் என்பதாலும் செங்கடல், அரேபியக் கடல்களை ஏமன் பெற்றிருப்பதாலும், பூகோள அரசியலை மையப்படுத்தி ஹவுத்திப் புரட்சியாளர்களுக்கு ஈரான் அரசு ஆதரவளிக்கிறது. ஆயுதங்கள் மற்றும் பயிற்சிகளை வழங்குகிறது..

அவ்வப்போது ஹவுத்திப் புரட்சியாளர்களுக்கும் சவுதி ராணுவத்துக்கும் கடும் துப்பாக்கிச் சண்டை வெடிக்கும். இந்நிலையில், கடந்த மே 14-ம் தேதி சவுதி அரேபிய அரசுக்குச் சொந்தமான சவுதி அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் பைப் லைனை, தானியங்கி விமானம் மூலம் ஹவுத்திப் புரட்சியாளர்கள் தகர்த்து எறிந்தனர். அபிப், அல்-டவுத்மி ஆகிய பகுதிகளில் செல்லும் பைப் லைன் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலால், சவுதிக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ஏமன் தலைநகர் சனா மீது சவுதி அரேபிய விமானப்படை தாக்குதல் நடத்தின. இந்நகரம், ஹவுத்திப் புரட்சியாளர்கள் வசமுள்ளது.

இந்த நிலையில், இஸ்லாமியர்களின் புனித நகரான மக்காவை நோக்கி பாய்ந்த இரண்டு ஏவுகணைகளை, சவுதி அரேபிய ராணுவம் தகர்த்துள்ளது. ஆனாலும், அடுத்தடுத்து தாக்குதல் நிகழ்த்தப்படலாம் என்பதால், அங்கு உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது. சவுதி அரேபியா மெக்காவில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தயிப் மற்றும் ஜெத்தா நோக்கி வந்த ஏவுகணைகளை சவூதி சுட்டு வீழ்த்தியது.