உலகம்

பொள்ளாச்சி சம்பவம் தூக்கத்தை கெடுக்கிறது: திரைப்பட விழாவில் வைரமுத்து

புதுமுகங்கள் அலெக்ஸ், அஞ்சலி நாயர் நடிப்பில், அறிமுக இயக்குநர் செல்வகண்ணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள  நெடுநல்வாடைபடத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி  சென்னையில் நடந்தது. இந்தப் படத்தில் பாடல்களை எழுதியுள்ள கவிஞர் வைரமுத்து நிகழ்வில் கலந்து கொண்டு பேசியதாவது:-

இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பு வெளிவந்த ஒரு தமிழ் இலக்கியத்தின் தலைப்பை இந்த டிஜிட்டல் யுகத்தில் படம் ஒன்றுக்குத் தலைப்பாக வைத்து தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்த படத்தில் தாத்தா-பேரனின் வாழ்க்கையை இயக்குநர் செல்வகண்ணன் சொல்லி இருக்கிறார். நுட்பமான பல விஷயங்கள் படத்தில் உள்ளன.

தற்போது பொள்ளாச்சி சம்பவம் குறித்து ஆட்சியாளர்களும், பொது சமூகமும் தவிக்கிற தவிப்பை நீங்கள் பார்க்கிறீர்கள். அங்கு ஒரு பெண்ணின் கதறல் தூக்கத்தை கெடுக்கிறது. நம்பி வந்த பெண்ணுக்கு துரோகம் நடந்துள்ளது. பொள்ளாச்சியில் மட்டும் தான் இப்படியான துயரம் நடக்கிறதா? இதற்கான அடிப்படை காரணம் என்ன?

மனிதன் இயல்பாகவே மிருகத்தின் குழந்தை. அந்த மிருகங்களை சரிப்படுத்ததான் கலை. அந்தக் கலையால் பண்படாத பைத்தியங்கள் தான் இப்படியான செயலை செய்திருக்கிறார்கள். இந்த மனநோய்களை தயாரிப்பதில் இந்த சமூகத்துக்குரிய பங்கு என்ன?

குற்றம் செய்தவர்களை நடுத்தெருவில் நிறுத்தி தோல் உரியுங்கள் என்று சிலர் சொல்கிறார்கள். அதைவிட அவ்வாறு கூறுபவர்களின் மனதில் இருக்கும் மிருகத்தோலைதான் உரிக்க வேண்டும். அதைத்தான் கலை செய்கிறது. இதைத் தான் நெடுநல்வாடை செய்துள்ளது.

நெடுநல்வாடை வணிக ரீதியாக வெற்றி பெற்றது மகிழ்ச்சி. படத்தில் சிறப்பாக நடித்த பூ ராமுக்கு நிச்சயமாக மாநில விருதாவது கிடைக்கும். இனி முழுமையாக திரைப்பட பாடல்கள் எழுதும் பணியில் ஈடுபட இருக்கிறேன்.

இவ்வாறு அந்த நிகழ்வில் வைரமுத்து பேசினார்.