Breaking News

பொலிஸ் பரிசோதகர் இருவரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் – கந்தளாய் பிரதேச சபையின் உறுப்பினர் உட்பட நால்வர் விளக்கமறியலில்

கந்தளாய் பிரதேசத்தில் உப பொலிஸ் பரிசோதகர் இருவரை தாக்கி காயப்படுத்திய குற்றச் சாட்டுகளுடன் தொடர்புடைய கந்தளாய் பிரதேச சபையின் உறுப்பினர் உட்பட நால்வரை இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி தேனபது இன்று உத்தரவிட்டார்.

கந்தளாய், தீவரகம,வெவசிறிகம பகுதியைச் சேர்ந்த 29,41,30 மற்றும் 42 வயதுடைய நால்வரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களின் ஒருவர் கந்தளாய் பிரதேச சபையின் பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.

சித்திரைப் புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு உப பொலிஸ் பரிசோதகர்கள் இருவர் குடும்பம் சகிதம் கந்தளாய் குளத்தினை அண்டிய பகுதியில் கடந்த 15 ஆம்திகதி குளித்துக் கொண்டிருந்த வேளை சந்தேக நபர்கள் மது போதையில் பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கியதோடு அவர்களின் மனைவிமார்களையும் சந்தேக நபர்கள் துன்புறுத்தியுள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உட்பட நால்வரையும் பொலிஸார் கைது செய்து கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதோடு,அடுத்த வழக்குத் தவணையின் போது அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.

( திருமலை செய்தியாளர் )