இலங்கை

பெரும்பாலான காணிகள் விடுவிக்கப்பட்டுவிட்டன – இனி உள்ளவை சிறு பிரச்சினைகள் என்கிறார் மைத்ரி !

வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் கையகப்படுத்தியிருந்த பெரும்பாலான காணிகள் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும் இனிமேல் எஞ்சியுள்ள சிறு பிரச்சனைகளை கீழ் மட்டத்தில் முடித்துக் கொள்ளலாமென்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் இன்று பிற்பகல் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்றபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.வடக்கு கிழக்கின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ,படைத்தளபதிமார் ,அரச அதிகாரிகள் என பல்வேறு தரப்பின் முக்கியஸ்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

காணி விடுவிப்பு குறித்து இன்றைய கூட்டத்தில் பேசப்பட்டபோது கருத்துவெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது ,

”கிட்டத்தட்ட 90 வீதமான காணிகள் விடுக்கப்பட்டு விட்டன.இனி இதுவிடயத்தில் தடைகள் ஏதும் இருப்பின் கீழ்மட்டத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஆளுநர்கள் -எம்.பிக்கள்- படைத்தரப்பு – அரச அதிபர்மார் ஆகியோர் இவற்றை கையாளலாம்.அதற்கும் மேல் ஏதாவது சிக்கல்கள் வந்தால் என்னிடம் முறையிடுங்கள் ” என்றும் குறிப்பிட்டார் ஜனாதிபதி