பெட்டிக்கடைப் பேச்சு

பெட்டிக்கடை பேச்சு -3 ”சூரியனும் சந்திரனும் சும்மா இருக்கும்போது விளக்கு விளம்பரம் தேடிச்சாம்…” என்று கந்தையா அண்ணன் கூறிய பழமொழியை கேட்ட நயீம் நானா சிரித்தபடி ” என்ன அண்ணே அதுக்கு அர்த்தம் ” என்று கேட்டார்…

பெட்டிக்கடை பேச்சு -3

”சூரியனும் சந்திரனும் சும்மா இருக்கும்போது விளக்கு விளம்பரம் தேடிச்சாம்…” என்று கந்தையா அண்ணன் கூறிய பழமொழியை கேட்ட நயீம் நானா சிரித்தபடி ” என்ன அண்ணே அதுக்கு அர்த்தம் ” என்று கேட்டார்…

” இல்ல சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன்…யூ என் பியில பல சீனியர்மார் இருக்கும்போது அங்க ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு அடிபாடு நடக்குது…” என்று கந்தையா அண்ணன் கூற …” கொஞ்சம் டீட்டெய்லா சொல்லுங்க அய்யே..” என்று புஞ்சிபண்டா கெஞ்சாத குறையாக கேட்டார்…

” இல்ல…சஜித் ஜனாதிபதி தேர்தலில போட்டியிட தீர்மானிச்சது ரணிலுக்கு பிடிக்கேல்ல…அதுக்கு காரணம் சஜித் சிறிசேனவோட நெருங்கி பழகிறது…அதனால கரு ஜயசூரியவ ஜனாதிபதி வேட்பாளரா போட்டுட்டு பிறகு பிரதமரா போட்டியிடலாம்னு ரணில் டிசைட் பண்ணியிருக்காராம்…” கதையை ஆரம்பித்து சொல்லத் தொடங்கினார் கந்தையா அண்ணன் .

” பொது வேட்பாளர் அப்போ கரு தான்?” இருப்புக் கொள்ளாமல் கேட்டார் நயீம் நானா..

” அங்க தான் ரணில் ட்விஸ்ட் வச்சிருக்கார்… ஜனாதிபதி தேர்தல் பத்தி ரணில் ஒரு யோசனை தயாரிச்சுருக்கிறார்… இனி தேசிய வேட்பாளர் எண்டு ஒரு ஆளை நியமிக்க அதில அவர் யோசனை சொல்லியிருக்கிறார்.பொது வேட்பாளர் கொன்செப்ட் சிறிசேனவோட முடிஞ்சுபோச்செண்டு நினைக்கும் ரணில் தேசிய வேட்பாளர் எண்டுபோட்டு கருவ அதில போட இருக்காராம்…அது மட்டுமில்ல அப்படி தேசிய வேட்பாளரா வாரவர் எந்த கட்சியிலயும் மெம்பரா இருக்க முடியாது….அனுபவம் உள்ள நல்ல மெச்சூரிட்டி உள்ள ஆளா இருக்கோணும் எண்டும் ரணில் தன்னோட யோசனைத்திட்டத்தில சொல்லி இருக்காராம்… நோர்மலா கட்சிக்குள்ளேர்ந்து நாட்டுத் தலைவரா வாரவர் தான் யூ என் பி தலைவரா இருக்கணும் எண்டு ஒரு யாப்பு இருக்குதல்லொ …அத மாத்தி புதுசா ஒரு யோசனை கொண்டுவரப்பார்க்கிறார் ரணில்…இப்போ கரு ஜனாதிபதியா வந்தா கட்சிக்குள்ள அவர் பதவி வகிக்க ஏலாது …அத்தோட ரணில் தயாரிச்சிருக்கிற இந்த யோசனை சஜித்துக்கு செட் ஆகாது போலக்கிடக்குது…” தனக்கு தெரிந்த தகவல்களை நீட்டி முழங்கினார் கந்தையா அண்ணன் ..

” என்ன ரணில் நினைச்சாலும் இந்தியா சஜித் வாறத தான விரும்புது…” என்று குறுக்கு கேள்வியை நயீம் நானா கேட்ட கையோடு அதற்கு பதில் கொடுக்க திரும்பினார் புஞ்சிபண்டா…

”எல்லாம் அப்படிதானவா நினைக்கரான் ..இந்தியா சஜித் வாறத ஆரம்பத்தில விரும்பினாலும் இப்போ அதில கொஞ்சம் சேன்ஜ் ஆகியிருக்காம்…எய் தன்னவத..அவரோட அப்பா பிரேமதாசா இந்தியாவுக்கு அப்போ எதிரா நிண்ட ஒரு ஆள்…மகனும் அப்படி மாறிடுவாரெண்டு இந்திய பயப்படுதாம் …அதனால சஜித் வாறத விட கரு வந்தா நல்லதெண்டு இந்தியா நினைக்குதாம்..சில நேரம் யூ என் பி காரனுவளே பழசையெல்லாம் கிளறி இந்தியாவுக்கு ஏத்தி விட்ருக்கலாம்..ஆச காட்டி மோசம் செஞ்சிட்டானுவ..” என்று தனது டிப்ளோமட்டிக் தகவல்களை எடுத்து விட்டார் புஞ்சிபண்டா…

” தாமரைமொட்டு பக்கத்தில கோட்டா இறங்கப் போறாராம்.. இந்த மாசம் அவர் பிரச்சார வேலையெல்லாம் ஆரம்பிக்கப் போறாராம்… முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் மஹிந்தவோட பேசும்போது இந்த அரசாங்கத்தை திட்டி தீர்த்தாராம்…அடிப்படைவாதிகள் ஒழிக்கப்படவேண்டுமெண்டு கோட்டா சொன்னா நாங்க அதுக்கு ஆதரவளிப்பம்…முஸ்லிம் மக்கள் பயங்கரவாதத்துக்கு ஆதரவில்ல எண்டு காட்ட நாங்க எந்த லெவலுக்கும் போகத் தயாரா இருக்கமெண்டு அந்த தலைவர் சொன்னாராம்…இந்த நாட்களில ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்த ரெடி பண்ணும் வேலைகளில பெசில் ராஜபக்ச பிசியா இருக்காராம்…” கந்தையா அண்ணன் குறுந்தகவலையொன்றை சொன்னார்…

” இதுக்குள்ள இன்னொரு மேட்டர் நடந்தது …இந்தியப் பிரதமர் மோடி இலங்கை வந்தாரல்லோ…இங்கு வந்து போன பிறகு இங்க கவனிச்சதுக்கு நன்றி தெரிவிச்சு ரணிலுக்கு மோடி ஒப்பிஸ்லேர்ந்து கடிதம் வந்திருக்குதாம்.. ஜனாதிபதிக்கு இப்படியொரு கடிதம் வரல்லையெண்டு ஒரு மேட்டர் கொழும்பு அரசியலுக்குள் ஓடுது..” என்று சிரித்தபடி இன்னுமொரு தகவலையும் சொன்னார் கந்தையா அண்ணன்.

” மரண தண்டனை மேட்டர் என்னவாம்..எப்போ நடக்குதாம்…” கேட்டார் நயீம் நானா…

” மரண தண்டனை விரைவா நிறைவேற்றப்படுமெண்டு சனாதிபதி ஐயா சொன்னாலும் அது இப்போதைக்கு நடக்குற மாதிரி இல்லவா ..உலக நாடுகள் எல்லாம் ஏசுரான்…தூக்கு தண்டன அமுலானா ஜீ எஸ் பி ப்ளஸ் சலுக இல்லாம போவலாம்.. இருக்க நாட்டு பிரச்சினைக்கு இது இன்னும் தொல்லைய தர போவுது…ஆனா எனக்கு தெரிஞ்சபடி இன்னும் தூக்கு தண்டனைக்கு திகதி குறிப்பிடேல்லையாம்..குறிப்பிட்டதா ஜனாதிபதி சொன்னாலும் அப்படி இல்லையாம்வா….” என்று ஒருவித நமட்டுச் சிரிப்புடன் சொன்னார் புஞ்சிபண்டா..

” கல்முனை தமிழ் செயலக பிரச்சினை பத்தி ஆராய அரசாங்க அதிபர் தலைமைல ஒரு குழு கமிட்டி போட்டிருக்குதாம்…30 பேர் அதில இருக்காங்களாம்…அது கூடி ஆராய்ஞ்சு ஒரு முடிவை எடுக்குமாம்..எப்படியோ தமிழ் முஸ்லிம் உறவு பாதிக்காம நல்லதொரு முடிவு வந்தா சரி…” என்றார் நயீம் நானா…

” நான் சொல்லுறத நோட் பண்ணிக் கொள்ளுங்கோ..தன்னோட பதவிக்காலம் எப்போ முடிய போகுதெண்டு ஒகஸ்ட் மாதம் சுப்ரீம் கோர்ட்டில வியாக்கியானம் கேக்கப் போறார் ஜனாதிபதி ஐயா..அதில சிலநேரம் ஒரு முடிவு வந்து 2020 ல தான் பதவிக்காலம் முடியுதெண்டு சொல்லப்பட்டா மாகாண சபைத் தேர்தல நடத்தி பிறகு அதில வாற ரிசல்ட்ட பார்த்து அடுத்த எலெக்சனுக்கு போக யோசிச்சிருக்காராம் மைத்ரி…எனக்கென்னவோ இந்த வருஷம் ப்ரெசிடெண்ட் எலெக்சன் வர மாதிரி தெரியேல்ல…” என்று திடுக்கிடும் தகவலை கூலாக சொல்லி முடித்த கந்தையா அண்ணன் தொடர்ந்தார்..

” வடக்கு கிழக்கில பெரும் எடுப்பில சைவ மாநாடு ஒண்டு நடக்கப் போகுதாம்…ஒரு வார காலம் நடக்கப் போற இந்த மாநாட்டுக்கு ஏற்பாடுகள ஜனாதிபதி ஐயாவோட ஒப்பீஸ் செய்யுதாம்.முதல் நாள் விழாவில ஜனாதிபதி ஐயா கலந்துகொள்ள ஏற்பாடுகள் நடக்குது…அடுத்தடுத்த நாட்களில நடக்கும் நிகழ்வுகளுக்கு சஜித் ஐயாவ கூப்பிடச்சொல்லி ஓடர் போயிருக்காம் …தமிழ் ஓட்டுக்கள டார்கட் பண்ணுறாங்கள் போல….” என்று கூறியபடி கந்தையா அண்ணன் செல்லத் தயாராக மற்றவர்களும் புறப்பட்டனர்.