பெட்டிக்கடைப் பேச்சு

பெட்டிக்கடை பேச்சு – 02 ” என்ன கந்தையா அண்ணா…ஜனாதிபதியின் அறிவிப்ப பார்த்ததா…? தேநீரை கையில் எடுத்தபடி பேச்சை ஆரம்பித்தார் புஞ்சிபண்டா…

பெட்டிக்கடை பேச்சு – 02

” என்ன கந்தையா அண்ணா…ஜனாதிபதியின் அறிவிப்ப பார்த்ததா…? தேநீரை கையில் எடுத்தபடி பேச்சை ஆரம்பித்தார் புஞ்சிபண்டா…

” ஓம் ஓம் பார்த்தன் பார்த்தன் ….ஏற்கனவே ஐயாவின்ர வேலைகளால கொதிச்சு போயிருக்கிற சர்வதேச நாடுகள் இந்த மரண தண்டனையோட இன்னும் சூடாகப் போகுதுகள்…மரண தண்டனை நாலு பேருக்கு கிடைக்க போகுது… இண்டைக்கு காலைல ஜனாதிபதி ஐயாவோட ப்ரெஸ் மீட்டப் பார்த்து வெளிநாட்டு தூதுவர்மார் கொதிச்சுப் போயிருக்கதா தகவல்….” கதையை சொல்ல ஆரம்பித்தார் கந்தையா அண்ணர் .

” வழமையா வடக்கு ஆளுநரையோ அல்லது தன் கட்சி எம் பி மாரையோ பக்கத்தில் வச்சுக் கொண்டு பேசும் ஜனாதிபதி ஐயா இன்றைக்கு தனித் தவில் வாசிச்சதையும் பார்த்தீங்களோ …அப்படித்தான் இருக்குது அவரோட நிலைமை…. மரணதண்டனை நிறைவேத்த நாலு குற்றவாளிகளை தீர்மானிச்சு அந்த ஓடரில சைன் பண்ணிய தகவலச் சொன்னாலும் அந்த திகதி மற்றும் ஆக்களோட பேர் வெளில போயிடக் கூடாதென்றுபோட்டு மைத்ரி ஐயா கடும் கண்டிஷன் போட்டிருப்பதா தகவல்..” என்றும் விளக்கினார் கந்தையா அண்ணன் .

”அது ஏனாம் இந்தளவு ரகசியம்…? கேட்டார் நயீம் நானா.

”நானா… திகதி வெளியில தெரியவந்தா அதுக்கு முதல் சிறைக்குள்ள கைதிகள் குழம்பலாம்…அல்லது மரணதண்டனை கைதிகள் நாலு பேர் பெயர் விபரங்கள் வெளியில் வந்தா அவர்கள் கருணை மனு எதுவும் ஜனாதிபதிக்கு அனுப்பலாம்..அப்படி கருணை மனு அனுப்பினா ஏற்கனவே அவங்களுக்கு தண்டனையை நிறைவேத்த வச்ச கையொப்பம் கேள்விக்குள்ளாகி இந்த கருணை மனுவை பரிசீலிக்க வேண்டி ஏற்படலாம்…அதான் சீக்ரெட்டா வச்சிருக்கிறார்…அநேகமா 29 அல்லது 30 ஆம் திகதிகள்ல இது நடக்கலாம்… தண்டனை நிறைவேறிய பிறகு அறிவிப்பு வருமாம்… அதிகாலை நேரம் தூக்கு நிறைவேற்றப்படுமெண்டு சொல்லப்படுது…” என்று நீட்டி முழக்கினார் கந்தையா அண்ணர்..

” இவ்வளவு எதிர்ப்பு இருக்கும்போதும் மைத்ரி தொரே ஏன் இவ்வளவு அவசரப்படுது ..” என்று ஒரு குறுக்குக் கேள்வியை கேட்டார் நயீம் நானா..

” என்ன ஹாஜியார்….இது தெரியாதா…கொஞ்ச நாளைக்கு முன்னம்தான ட்ரக்ஸ் ஒழிக்கிற விஷயத்தில மைத்ரி மாத்தயாட பேர் பேமஸ் ஆச்சு.. பிறவு சஹ்ராண்ட எட்டேக் நடந்த கையோட அதெல்லாம் மறந்து போச்சு…இப்போ எலெக்சன் ஒண்டு கிட்ட வாரபடியா இப்படி எதாவது செஞ்சு … எதிர்கால சந்ததியோட பாதுகாப்ப உறுதிப்படுத்தினார் எண்ட பேர வாங்கலாம் எண்டுபோட்டு மைத்ரி தொரே பார்க்குது போல..ஆனா இது இப்ப இருக்க நிலமேல பெரிசா எடுபடாது…அதேபோல வெளிநாடுகளும் கோவிச்சுக்கொள்ளப்போகுது…”என்று நானாவுக்கு இடையில் விளக்கமளித்தார் புஞ்சிபண்டா…

” அரசியலமைப்பு 19 வது திருத்தம் இல்லாமலாக்கப்பட வேண்டுமென சொல்லுறாரே ஜனாதிபதி….?” கேட்டார் நயீம் நானா..

” சொல்லுவார் சொல்லுவார்… நாட்டை நாசமாக்க என் ஜி ஓ ஒண்டு செஞ்ச வேலைதான் அந்த அரசியலமைப்பு திருத்தம் எண்டு சொல்லுறாரே பாருங்களேன்… சோபித்த தேரர் தலைமையிலான நீதிக்கான இயக்கம் முன்னுக்கு நின்று இவரை ஜனாதிபதியாக்கி… நல்லாட்சி எண்ட பேரில 100 நாள் வேலைத்திட்டத்த முன்வச்சு எல்லாத்தையும் செய்ய இப்போ அந்த இயக்கத்த என் ஜீ ஓ எண்டு சொல்லுறார் மைத்ரி…. ….அப்போ முழு அதிகாரங்களோட எதையும் செய்யும்படி ஜனாதிபதி இருக்கோணும்….நினைச்ச நேரம் பிரதமர நீக்கலாம்..நினைச்ச நேரம் ஜட்ஜ்மார மாத்தலாம்… அப்படி இருந்தா அது நல்லாட்சியா…? பதவி கடைசிக்காலத்தில.. இனி இந்த இடத்துக்கு வர முடியுமோ முடியாதோ என்ற டென்ஷனில மனுஷன் கண்டபடி கதைக்குது போல….” என்று கூறி தனது ஆதங்கத்தைக் கொட்டினார் கந்தையா அண்ணன்.

” அதென்ன தேசிய தமிழ் முற்போக்கு கூட்டணி..புது தமிழ் அரசியல் கட்சியா…? புஞ்சி பண்டா கேட்க நயீம் நானா கந்தையா அண்ணனை பார்த்தார்.

”ஓ அதுவா உந்த ஆறுமுகம் தொண்டமான் ஐயா விக்னேஸ்வரன சந்திச்சத வச்சுத் தானே இந்தக் கேள்வியை கேட்கிறீங்கள்…’ என்று கொடுப்புக்குள் சிரித்தவாறே ” அப்படி ஒரு தேசிய கூட்டணியை அமைச்சு அடுத்த பார்லிமென்ட் எலக்சனில போட்டிபோட ஒரு ஏற்பாடு நடக்குதாம்…ஆனா கூட்டணிக்கு அந்தப் பெயரோ தெரியேல்ல…” என்று கதையை சுருக்கமாக முடித்தார் கந்தையா அண்ணன் .

” நேத்து பேசில் ராஜபக்சவ கொஞ்சம் கட்சித் தலைவர்மார் சந்திச்சிருக்காங்க..என்ன நடந்தது?” – கேட்டார் நயீம் நானா .

”ஈ பி டி பி டக்ளஸ் மாத்தயா பேசி இருக்குது.. உங்கட தமிழ் மக்கள் பிரச்சினைய தீர்க்க ஒரு யோசனைய வைக்காட்டி தமிழ் ஆக்களிட்ட போறது கஷ்டம் எண்டு டக்ளஸ் சொன்னதாம்.ஆனா அதுக்கு பிறகு பெசில சந்திச்ச கம்யூனிஸ்ட் கட்சி ஆக்கள்.. கோட்டா போட்டி போடுறத விட பெசில் போட்டி போடுறது நல்லது எண்டு சொன்னதாம்.ஆனா அதுக்கு பதில் குடுத்த பெசில் சிங்கள வோட்டுக்கள டார்கட் பண்ணணுமெண்டா கோட்டா தானே நல்லதெண்டு சொன்னாராம்.எப்படியோ குமார் வெல்கம இப்போ பகிரங்கமா கோட்டாவுக்கு ஏச ஆரம்பிச்சு போட்டார்…அதனால குயிக்கா ஒரு முடிவ மஹிந்த மாத்தயா அறிவிப்பது நல்லம்…’ என்று நயீம் நானாவின் கேள்விக்கு விளக்கமளித்தார் புஞ்சிபண்டா…

”என்ன நயீம் நானா நக்கல் சிரிப்பு…? சொல்ல வந்தத சொல்லுங்கோ..” என்று கந்தையா அண்ணன் பேப்பரை மடித்தபடி கேட்டார்…

” இல்ல… து.. என்ற எழுத்தில ஆரம்பிக்கும் பேரை கொண்ட முன்னாள் அமைச்சர் ஒருவர் …பெரிய தலைவருக்கும் நெருக்கமானவர்… இப்போ இரண்டாவது திருமணம் செஞ்சு கொண்டாராம்…அதுவும் இரகசியத் திருமணம்… முந்தி கண்டியில் பிரபல அரசியல் தலைவர் ஒருவரோட மகளை கலியாணம் செஞ்ச அவர் அதில டிவோர்ஸ் ஆகி இப்போ இந்த கலியாணத்த செஞ்சிரிக்கதா கத…நாடு இருக்கிற ரணகளத்திலயும் ஒரு கிளுகிளுப்பு…”என்று நயீம் நானா சொல்ல புஞ்சிபண்டாவும் கொல்லெனச் சிரித்தார்.

”இந்த இளவயது தற்கொலைகளுக்கு தீர்வு காண வேணும் பாருங்கோ…போதிய விழிப்புணர்வு கொடுக்கோணும்…காதல் தோல்வி என்றுபோட்டு ஹட்டன் நகர மேயரின் மகன் தற்கொலை செய்துகொண்டதா தகவலொண்ட பார்த்தன்… இளவயசுகள் இந்த காதல் கீதல் எண்டு சாகமுன்னம் கஷ்டப்பட்டு வளர்த்த பெத்ததுகள நினைச்சு பார்க்கோணும்….கவலையாக் கிடக்கு..” என்று கூறியவாறு புறப்படத் தயாரானார் கந்தையா அண்ணன் . மற்றவர்களும் கிளம்பத் தயாராகினர்